தைவானில் ஹெலிகாப்டர் விபத்தில் ராணுவ தளபதி பலி
தைவான் நாட்டின் தலைநகர் தைபேயில் உள்ள சாங்சன் விமானப்படை தளத்தில் இருந்து நேற்று உள்ளூர் நேரப்படி காலை 8.07 மணிக்கு ‘யூஎச் 60எம்’ ரக ஹெலிகாப்டர் புறப்பட்டு சென்றது. ஹெலிகாப்டரில் அந்த நாட்டின் ராணுவ தளபதி ஷென் யி மிங் (வயது 62) உடன் மூத்த ராணுவ அதிகாரிகள் 13 பேர் பயணம் செய்தனர். அவர்கள் நாட்டின் வடகிழக்கு பகுதியில் டோங்காவ் தீவில் உள்ள ராணுவ தளத்துக்கு சென்று கொண்டிருந்தனர்.
ஹெலிகாப்டர் புறப்பட்டு சென்ற 13 நிமிடங்களுக்கு பிறகு கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. இதையடுத்து ராணுவ தளபதியுடன் மாயமான ஹெலிகாப்டரை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன.
விமானப்படைக்கு சொந்தமான 20-க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்கள் மற்றும் சிறிய விமானங்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டன. இதில் நியூ தைபே சிட்டி நகருக்கு அருகே உள்ள மலைப்பாங்கான பகுதியில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி கிடப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது.
இந்த கோர விபத்தில் ராணுவ தளபதி ஷென் யி மிங் உள்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 5 பேர் மட்டும் காயங்களுடன் உயிர் தப்பினர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். இந்த விபத்து குறித்து விமானப்படை மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘ஹெலிகாப்டர் நடுவானில் பறந்தபோது மோசமான வானிலை காரணமாக தொடர்ந்து பயணிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. எனவே விமானி ஹெலிகாப்டரை அவசரமாக தரையிறக்க முயற்சித்தார். அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக ஹெலிகாப்டர் தரையில் விழுந்து நொறுங்கியது’’ என்றார்.
தைவான் நாடு அதிபர் தேர்தலுக்கு தயாராகி வரும் நிலையில் ஹெலிகாப்டர் விபத்தில் அந்த நாட்டின் ராணுவ தளபதி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஹெலிகாப்டர் விபத்தை தொடர்ந்து அந்த நாட்டின் அதிபர் சாய் இங் வென் நேற்று தனது தேர்தல் பிரசாரத்தை ரத்து செய்தார். விபத்தில் உயிரிழந்த ராணுவ தளபதி ஷென் யி மிங் மற்றும் ராணுவ அதிகாரிகளின் குடும்பங்களுக்கு அவர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பேஸ்புக் பதிவில் ‘‘ராணுவ தளபதி ஷென் யி மிங் ஒரு சிறந்த, திறமையான தளபதியாக இருந்தார், அதே போல் அனைவராலும் விரும்பப்பட்ட மற்றும் மதிக்கப்பட்ட ஒரு அதிகாரியாக இருந்தார். அவரது இறப்பு நமக்கு மிகுந்த துயரத்தை அளித்து இருக்கிறது’’ என தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply