ஈராக்கில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல்: 6 பேர் பலி?
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதகரத்தை சமீபத்தில் ஈரான் நாட்டை சேர்ந்தவர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்து இந்த போராட்டம் நடத்தப்பட்டது.
இந்த போராட்டம் பற்றி அமெரிக்க உளவுத்துறை தீவிரமாக விசாரித்த போது ஈரானில் உள்ள துணை ராணுவபடையான ஹஷீத் அல்-ஷாபி பற்றி சில திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. இந்த துணை ராணுவ படை காசிம் சுலைமானி என்பவர் தலைமையில் செயல்பட்டு வரும் அமைப்பாகும்.
இந்த துணை ராணுவ படை ஈரான் அரசுக்கு மிகவும் உதவிகரமாக இருந்து வருகிறது. இந்த துணை ராணுவ படையில் பெரும்பாலும் ஷியா பிரிவை சேர்ந்த முஸ்லிம்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த அமைப்புக்கு ஈரான் மக்களிடம் மிகுந்த செல்வாக்கு உள்ளது.
வெளிநாட்டில் இஸ்லாமிய அமைப்புகளிலும் ஹஷீத் அல்-ஷாபி துணை ராணுவ படைக்கு ஆதரவு பெருகியது. இந்த அமைப்பு அமெரிக்காவுக்கு எதிராக தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரித்தது. இதைத்தொடர்ந்து இந்த அமைப்பை அமெரிக்கா கண்காணித்து வந்தது.
இந்த நிலையில் கடந்த புதன்கிழமை பாக்தாத்தில் ஹஷீத் அல்-ஷாபி துணை ராணுவ படை ஆதரவாளர்கள் முற்றுகை போராட்டம் நடத்தியபோது அமெரிக்கா கடும் கோபம் அடைந்தது. இதைத்தொடர்ந்து பாக்தாத்தில் நேற்று அதிகாலை காசிம் சுலைமானி சென்று கொண்டிருந்த வாகன அணிவகுப்பு மீது அமெரிக்கா திடீர் தாக்குதல் நடத்தியது.
ஆளில்லாத விமானங்கள் மூலம் ஏவுகணை வீசி இந்த தாக்குதலை அமெரிக்க ராணுவம் நடத்தியது. இதில் ஹஷீத் அல்-ஷாபி துணை ராணுவ அமைப்பு தலைவர் காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். அவருடன் துணை தலைவர் அபுல் மஹதி உள்பட மேலும் 7 பேர் கொல்லப்பட்டதாக ஈரான் அறிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவின் பேரில் இந்த தாக்குதல் நடந்ததாக தகவல் தெரியவந்துள்ளது. அமெரிக்க ராணுவம் மீது காசிம் சுலைமானி தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டி இருந்தது உறுதியாக தெரிய வந்ததால் காசிம் சுலைமானி கொல்லப்பட்டதாக அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன் அறிவித்துள்ளது.
காசிம் சுலைமானி கொல்லப்பட்டதால் ஈரான் ஆதரவு பயங்கரவாதிகள் கடும் ஆவேசம் அடைந்துள்ளனர். அதுபோல ஈரான் நாட்டு அரசும் கடும் கோபம் அடைந்துள்ளது. காசிம் சுலைமானி கொல்லப்பட்டதற்காக அமெரிக்காவை பழி வாங்குவோம் என்று ஈரான் அதிபர் ஹசன் ரவுஹானியும், பயங்கரவாதிகளும் எச்சரித்துள்ளனர்.
இதையடுத்து அமெரிக்காவையும், ஈரானையும் உலக நாடுகள் சமரசம் செய்தனர். அமெரிக்காவின் தாக்குதலுக்கு ரஷியா, சிரியா உள்பட பல நாடுகள் கண்டனம் தெரிவித்தன. இந்தியா, சீனா உள்பட பல நாடுகள் அமெரிக்காவை சமரசம் செய்தன.
இந்த நிலையில் இன்று (சனிக்கிழமை) அமெரிக்க ராணுவம் மீண்டும் ஈராக் நாட்டில் சரமாரியாக தாக்குதல் நடத்தியது. நேற்று கொல்லப்பட்ட காசிம் சுலைமானிக்கு ஆதரவு தெரிவித்து பாக்தாத்தில் இன்று ஈரான் நாட்டு ஆதரவாளர்கள் மிகப்பெரிய மவுன ஊர்வலம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இதற்காக ஏராளமானோர் கார்களில் சென்றனர். அந்த வாகன அணிவகுப்பின் மீது அமெரிக்காவின் ஆளில்லாத விமானங்கள் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தின. இதில் ஏராளமான வாகனங்கள் சிதறின. நிறைய வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன.
இன்று அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 6 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிய வந்துள்ளது. நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர். ஈரானின் துணை ராணுவ படையை முழுமையாக அழிக்கும் வகையில் இந்த தாக்குதலை அமெரிக்கா நடத்தியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாக்தாத் நகரின் அருகே நடந்த இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ காட்சிகளை ஈராக் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ காட்சிகள் மூலம் இந்த தாக்குதலில் ஏராளமானோர் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஈராக்கில் அமெரிக்க தூதரகம் முற்றுகையிடப்பட்டதை தொடர்ந்து முதல் கட்டமாக 750 ராணுவ வீரர்களை அமெரிக்கா பாக்தாத்துக்கு அனுப்பி இருந்தது. நேற்று காசிம் சுலைமானி கொல்லப்பட்டதை தொடர்ந்து கூடுதலாக 3 ஆயிரம் ராணுவ வீரர்களை அமெரிக்கா அனுப்பி உள்ளது.
மத்திய கிழக்கு நாடுகள் பகுதியில் ஏற்கனவே அமெரிக்காவின் 14 ஆயிரம் வீரர்களை கொண்ட மிகப்பெரிய ராணுவ அமைப்பு செயல்பட்டு வருகிறது. ஈராக்கில் மட்டும் சுமார் 5 ஆயிரம் அமெரிக்க ராணுவ வீரர்கள் உள்ளனர்.
ஈரானின் துணை ராணுவ படையினர் கைவரிசை காட்டாமல் இருப்பதற்காக அமெரிக்கா இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
அமெரிக்காவின் தொடர்ச்சியான தாக்குதல் காரணமாக வளைகுடா நாடுகள் பகுதியில் கடும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க நிலைகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே ஈரானுக்கு ஆதரவான பயங்கரவாத அமைப்புகளும் அமெரிக்கா படைகள் மீது திடீர் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இதனால் போர் மூளும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஈராக்கில் நேற்றும், இன்றும் அமெரிக்க ஏவுகணை தாக்குதல் நடத்தியதால் கச்சா எண்ணை விலை 4 சதவீதம் அதிகரித்துள்ளது. ஒரு பேரல் கச்சா எண்ணை விலை 70 டாலரை நோக்கி உயர்ந்தபடி உள்ளது. பதட்டம் அதிகரித்தால் ஒரு பேரல் கச்சா எண்ணை விலை 80 டாலரை கடந்து செல்ல வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இத்தகைய நிலை ஏற்பட்டால் இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலை கணிசமாக உயர வாய்ப்பு உள்ளது. இந்தியா தனது கச்சா எண்ணை தேவைக்கு வளைகுடா நாடுகளையே நம்பி உள்ளது. ஈராக்கில் இருந்து மிக அதிகமான கச்சா எண்ணையை இந்தியா இறக்குமதி செய்து வருகிறது.
ஈராக் நாடு கச்சா எண்ணை வழங்கும் அளவை குறைத்தால் இந்தியாவுக்கு மேலும் பாதிப்பு ஏற்படும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply