பிரிட்டன் பாராளுமன்றத்தில் “பிரெக்சிட்” மசோதா நிறைவேறியது

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவது (“பிரெக்சிட் ”) தொடர்பாக கடந்த 2016-ம் ஆண்டு பிரிட்டனில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் பெரும்பாலான மக்கள் வெளியேறுதலுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

ஆனால் பிரெக்சிட் தொடர்பாக ஐரோப்பிய கூட்டமைப்புடன் பிரிட்டன் அரசு மேற்கொண்ட ஒப்பந்தத்தை அந்த நாட்டு பாராளுமன்றம் பல முறை நிராகரித்தது. இதனால் அப்போதைய பிரதமர் தெரசா மே தனது பதவியை ராஜினாமா செய்தார்.

அவருக்கு பின் பிரதமரான போரிஸ் ஜான்சனும் “பிரெக்சிட்” விவகாரத்தில் தொடர்ந்து சரிவை கண்டார். மேலும் இந்த விவகாரத்தில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்தது.

எனவே பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை அதிகப்படுத்தி பிரெக்சிட்டை நிறைவேற்றும் நோக்கில் போரிஸ் ஜான்சன் பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு தேர்தலை அறிவித்தார்.

அதன்படி கடந்த மாதம்  பிரிட்டனில் பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேட்டிவ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் அமோக வெற்றிபெற்றது. போரிஸ் ஜான்சன் மீண்டும் பிரதமரானார்.

அதனை தொடர்ந்து, “பிரெக்சிட்” நடவடிக்கை தீவிரம் அடைந்தது. பாராளுமன்றத்தின் ஒப்புதலோடு ஜனவரி 31-ந்தேதிக்குள் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் வெளியேறும் என போரிஸ் ஜான்சன் சூளுரைத்தார். வெறும் பேச்சோடு மட்டுமல்லாமல் அதற்கான வேலைகளில் அவர் தீவிரமாக இறங்கினார்.

அந்த வகையில் போரிஸ் ஜான்சன் தலைமையிலான புதிய அரசு அந்த நாட்டு பாராளுமன்றத்தின் கீழவையில் (ஹவுஸ் ஆப் காமன்ஸ்) “பிரெக்சிட்” மசோதாவை நேற்று முன்தினம் தாக்கல் செய்தது.

உடனடியாக அந்த மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதன் மூலம் மசோதாவுக்கு ஆதரவாக 330 வாக்குகள் கிடைத்தன.

அதேசமயம் முக்கிய எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி உள்பட பிற கட்சி உறுப்பினர்கள் மசோதாவுக்கு எதிராக வாக்களித்தனர். இதனால் மசோதாவுக்கு எதிராக 231 வாக்குகள் பதிவாகின.

அதனை தொடர்ந்து பெரும்பான்மையான வாக்கு வித்தியாசத்தில் மசோதா வெற்றிகரமாக நிறைவேறியது. அடுத்த கட்டமாக இந்த மசோதா பாராளுமன்ற மேலவைக்கு (ஹவுஸ் ஆப் லார்ட்ஸ்) அனுப்பப்பட இருக்கிறது.

அங்கு நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மசோதா மீது ஓட்டெடுப்பு நடத்தப்படும் என்று தெரிகிறது. அங்கும் இந்த மசோதா எவ்வித பிரச்சினையும் இன்றி நிறைவேறும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் மூலம் நீண்ட கால பிரச்சினைக்கு பிறகு இறுதியாக வருகிற 31-ந்தேதி ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் வெளியேறுகிறது. இது பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக கருதப்படுகிறது.

பிரெக்சிட்டுக்கு பிறகு வர்த்தகம் உள்பட எதிர்கால உறவுகள் குறித்து ஐரோப்பிய கூட்டமைப்பு மற்றும் பிரிட்டன் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் ஏற்படுத்த 11 மாத கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.

இந்த காலக்கெடு மிகவும் குறுகியது என விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், இந்த ஆண்டின் இறுதிக்குள் ஒப்பந்தத்தை ஏற்படுத்துவது சாத்தியம் என்றும், இதற்கான பேச்சுவார்த்தையை 31-ந்தேதிக்கு பிறகு உடனே தொடங்க தயாராக இருப்பதாகவும் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply