இராணுவ நடவடிக்கை குறித்து இந்தியாவுக்கு உடனுக்குடன் தெரியப்படுத்தினோம்: கோதபாய

விடுதலைப் புலிகளுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட மோதல்கள் குறித்து தொடர்ச்சியாக இந்தியாவுக்கு அறிவித்து வந்ததாக இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்தார். “முதலாவது நாளிலிருந்து ஒவ்வொரு நாள் குறித்தும் இந்தியாவுக்குத் தெரிவித்து வந்தோம். எமக்கும் சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் குறித்து வெளியிடப்பட்ட சந்தேகங்களை நீக்கும்  பொருட்டே இலங்கை மோதல்களில் ஏற்படும் அபிவிருத்திகள் குறித்து இந்தியாவுக்குத் தொடர்ச்சியாகத் தெரியப்படுத்தி வந்தோம்” என அவர் குறிப்பிட்டார்.

“நாம் இந்தியாவுடன் பொறிமுறையொன்றை ஏற்படுத்தியிருந்தோம். வெளிவிவகார அமைச்சுக்களின் ஊடாக இரு நாட்டு அதிகாரிகளுக்குமிடையில் நட்புறவு ஏற்படுத்தப்பட்டிருந்தது” எனத் தெரிவித்த கோதபாய ராஜபக்ஷ, இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சிவ்சங்கர் மேனன் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் ஆகியோர் இலங்கை வந்தமை அந்தப் பொறிமுறையின் ஒரு அங்கமெனவும் கூறினார்.

தமது தரப்பில் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்புச் செயலாளராகிய தான் உள்ளிட்டோர்  இரண்டு குழுக்களாகச் செயற்பட்டு மோதல்கள் குறித்து இந்தியாவுக்குத் தொடர்சியான விளக்கங்களைக் கொணடுத்து வந்ததாக அவர் தெரிவித்தார். பல்வேறு தடவைகள் தாம் இந்தியாவுக்குச் சென்றுவந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

“தமிழ் நாட்டிலிருந்து இந்திய அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. நாம் அதனைப் புரிந்துகொண்டு அவர்களுக்கு (இந்தியாவுக்கு) உதவும் வகையில் செயற்பட்டிருந்தோம். இந்தியாவுடன் நட்புறவை ஏற்படுத்தி அவர்களுடன் நெருக்கமாகச் செயற்பட்டுவந்தோம். இந்தியா விடுதலைப் புலிகள் பற்றிக் கவலைப்படவில்லை. அவர்கள் தோற்கடிக்கப்படவேண்டுமெனவே கவனம் செலுத்தியது. ஆனாலும், தமிழர்கள் குறித்து இந்தியா கவலை கொண்டிருந்தது” என்றார் கோதபாய ராஜபக்ஷ.

இதேவேளை, விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டம்மானின் சடலம் அடையாளம் காணப்படாதபோதும், அவர் கொல்லப்பட்டுவிட்டார் என்பது 100 வீதம் உறுதியென கோதபாய ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார். கடற்புலிகளின் தளபதி சூசை உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் சடலங்களை இராணுவத்தினர்; அடையாளம் கண்டிருந்தபோதும்;, பொட்டம்மானின் சடலம் மாத்திரம் அடையாளம் காணப்படவில்லையென அவர் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply