ஜனாதிபதி தலைமையில தேசிய படைவீரர்கள் தினம் அனுஷ்டிப்பு

பயங்கரவாதத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் போது தாய் நாட்டின் விடுதலைக்காக உயிர் நீத்த படை வீரர்களை கௌரவிக்கும் வகையில பாராளுமன்ற விளையாட்டுத்திடலில் அமைக்கப்பட்டுள்ள படைவீரர் நினைவு தூபிக்கு முன்னால் நேற்று நடைபெற்ற வைபவத்தில் சகல மத ஆசீர்வாதங்களும், முப்படை வீரர்களினது அணிவகுப்பு மரியாதையும் நடை பெற்றதுடன் மலர் அஞ்சலியும் இடம்பெற்றது.

ரணவிரு சேவா அதிகார சபை ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வில் சபாநாயகர், அமைச்சர்கள், மாகாண ஆளுநர்கள், முப்படைத் தளபதிகள், பொலிஸ் மா அதிபர் உட்பட முப்படை வீரர்களும் உயிர்நீத்த படை வீரர்களின் குடும்ப உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். மேற்படி வைபவத்தை முன்னிட்டு பாராளுமன்றத்தை அண்மித்த பிரதேசம் முழுவதும் அலங்கரிக்கப்பட்டு காணப்பட்டதுடன் பாதுகாப்பும் பலப்பட்டிருந்தது. உயிரிழந்த படை வீரர்களை கௌரவிக்கும் வகையில் நினைவுத் தூபிக்கு வலது புறமாக இராணுவ வீரர்களும், விமானப் படை வீரர்களும், பொலிஸாரும் அணிவகுப்பாக நிறுத்தப்பட்டிருந்தனர்.

நேற்று மாலை 4.45 மணியளவில் வைபவம் உத்தியோகபூர்வமாக ஆரம்பமானது. பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்ரமரத்னவின் வருகை இடம்பெற்றது. அதனை தொடர்ந்து விமானப் படைத் தளபதி எயார் சீப் மார்ஷல் ரொஷான் குணதிலக்க, கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட, இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா, பிரதான பாதுகாப்பு அதிகாரி எயார் சீப் மார்ஷல் டொனால்ட் பெரேரா, பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, சபாநாயகர் டபிள்யூ. ஜே. எம். லொக்குபண்டார ஆகியோரின் வருகை தொடராக அடுத்தடுத்து இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து ஜனாதிபதியின் வருகை இடம்பெற்றது. அதனைத்; தொடர்ந்து தேசிய கீதத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமானது. அதன் பின்னர், பௌத்த, இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ மத வழிபாடுகள் நடைபெற்றன.

அதன் பின்னர் உயிரிழந்த படைவீரர்களை நினைவுகூர்ந்து கௌரவிக்கு வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ செங்கம்பளத்தின் ஊடாக நினைவு தூபிநோக்கி அழைத்துச் செல்லப்பட்டார்.

முதலாவதாக மலர் வலயத்தை வைத்து ஜனாதிபதி தனது அஞ்சலியை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து சபாநாயகர், ஜனாதிபதி செயலாளர் ஆகியோர் மலர் வலயம் வைத்து தமது அஞ்சலியை செலுத்தினர். அதனையடுத்து, பாதுகாப்புச் செயலாளர், பிரதான பாதுகாப்பு அதிகாரி, முப்படை தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோர் கூட்டாக சென்று மலர் வலயங்களை வைத்து தமது அஞ்சலிகளை செலுத்தினர்.
முப்படையினரின் இறுதி வாத்தியக் முழக்கத்துடன் வைபவம் நிறைபெற்றது. இதன்போது அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர். வைபவம் நிறைவுபெற்ற பின்னர் அங்கிருந்து விடைபெற்றுச் செல்ல வந்த ஜனாதிபதி உயிர் நீத்த முப்படை உயர் அதிகாரிகளின் மனைவிமார்களும், உறவினர்களும் அமர்ந்திருந்த இடத்திற்கு சென்று அவர்களது சுக துக்கங்களை கேட்டறிந்துகொண்டதுடன் ஆறுதல் வார்த்தைகளையும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply