சிங்கள வைத்தியர்களை கிழக்கில் நியமிக்கக்கூடாது: கருணா அம்மான்

கிழக்கு மாகாணத்தின் கிராமப்புற வைத்தியசாலைகளில் சிங்கள வைத்தியர்கள் நியமிக்கப்படக்கூடாது என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்திலுள்ள சிங்கள வைத்தியர்களுக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல் காணப்படுவதால் அவர்களுக்கு நியமனம் வழங்க முன்னர் பாதுகாப்புக் குறித்து முன்னெச்சரிக்கையாக இருப்பது அவசியம் என கருணா அம்மான் என அழைக்கப்படும் முரளீதரன் கொழும்பு ஊடகமொன்றிடம் கூறினார்.

நாவற்காடு வைத்தியசாலையில் கடமையாற்றிவந்த சிங்கள வைத்தியரான பாலித பத்மகுமார என்பவர் இரண்டு தினங்களுக்கு முன்னர் இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.

கிழக்கு மாகாணத்தில் பதற்றமான சூழ்நிலையை ஏற்படுத்துவதற்காக விடுதலைப் புலிகளே இந்தக் கொலையை மேற்கொண்டிருக்கவேண்டுமென கருணா கொழும்பு ஊடகமொன்றிடம் தெரிவித்தார்.

“கிராமப்புற வைத்தியசாலைகளில் சிங்கள வைத்தியர்கள் நியமிக்கப்படக்கூடாது. அவ்வாறு அவர்கள் நியமிக்கப்பட்டால் பாதுகாப்புக் குறித்து கேள்வியெழும். சிங்கள வைத்தியர்கள் நகர்ப்புற வைத்தியசாலைகளில் நியமிக்கப்பட வேண்டும். தமிழ் அல்லது முஸ்லிம் வைத்தியர்களை தற்காலிகமாக கிராமப்புற வைத்தியசாலைகளில் நியமிக்கலாம்” என அவர் குறிப்பிட்டார்.

மூன்று சமூகங்களும் செறிந்து வாழும் பகுதியென்பதால், சிங்கள வைத்தியர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பதானது அங்கிருக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை நிச்சயமாகப் பாதிக்கும் என கருணா அம்மான் அந்த ஊடகத்திடம் கூறினார்.

இது விடுதலைப் புலிகளின் தாக்குதல் என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லையென அவர் குறிப்பிட்டார்.
பயங்கரவாதத்தை ஒழித்து கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்வதற்கு ஜனாதிபதி முன்னெடுத்திருக்கும் நடவடிக்கையைப் பாராட்டுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் கருணா அம்மான் மேலும் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply