தமிழ் மக்களின் முதல்தர எதிரி தமிழ் தேசிய கூட்டமைப்பு: ஆனந்தசங்கரி

புலிகள் அழிந்து விட்டதால் புலிகளின் பிரதிநிதிகள் எனக் கூறியிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (TNA) எம். பிக்கள் கெளரவமாக பதவி விலகவேண்டும். தமிழ் மக்களின் இன்றைய அவல நிலைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பே பதில் சொல்ல வேண்டுமென்றும் தமிழர்களின் முதல்தர எதிரி, தமிழ் தேசிய கூட்டமைப்பே எனவும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி விடுத்துள்ள விசேட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் ஆனந்தசங்கரி மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, இலங்கைத் தமிழர்களின் இயல்பு வாழ்க்கையைச் சீரழித்து, அவர்களை அநாதைகளாகவும், விதவைகளாகவும், ஊனமுற்றோர்களாகவும் ஆக்கி அகதி முகாம்களுக்குள் முடக்கியுள்ள பாவத்தையும், பழியையும் தமிழ் தேசிய கூட்டமைப்பே ஏற்கவேண்டும்.

புலிகளின் பிடியிலிருந்த அப்பாவித் தமிழர்களை விடுவிக்க முயற்சிக்காமல் புலித் தலைமைகளைக் காப்பாற்றவே தமிழ் தேசிய கூட்டமைப்பு பாடுபட்டது. ஐரோப்பிய யூனியன், ஐ.நா. என்பன எவ்வளவோ வேண்டியும் தமிழ்க் தேசிய கூட்டமைப்பு மாத்திரம் யுத்தத்தை நிறுத்தும்படி கோரி பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பாவிக்கும் புலிகளின் தந்திரத்துக்கும் தாளம் போட்டது.

இதனால் தமிழ் மக்கள் உயிர்களையும் சொத்துக்களையும், இருப்பிடங்களையும், உறவுகளையும் இழந்துள்ளனர். என்றோ ஒரு நாள் முகாம்களிலிருந்து வீடுகளுக்குத் திரும்பும்போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தவறுதலான அணுகுமுறைகளை மக்கள் புரிந்துகொள்வர்.

புலிகளின் பிடியிலிருந்து நாங்கள் விடுபட்டிருந்தால் இந்த இழப்புக்களை தவிர்த்திருக்கலாம் என உணர்ந்துகொள்வர்.

தமிழர்களின் உயிர்களும் உடைமைகளும் காவுக்கொள்வதற்கு காரணமாகவிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு உறவுகொள்ள எவ்வித அறுகதையும் கிடையாது. அவ்வாறு உறவுகொண்டால் உயிரிழந்த, காயமடைந்த, அகதிகளாக்கப்பட்ட தமிழர்கள் எங்களை மன்னிக்கமாட்டார்கள்.

ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பை புலிகளை ஏகப் பிரதிநிதிகளாக கொண்டோர் குறையாக எடைபோடக்கூடாது. மேயர் பதவிகளுக்காகவோ அல்லது பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்காகவோ தமிழ் கூட்டமைப்பைப்போல் விலைபோக ஜனநாக தமிழ்த் தேசிய கூட்டமைப்புத் தயாரில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஒரு தடியால் தொடுவதற்குக் கூட நாங்கள் தயாரில்லை.

புலிகள் அழிந்துவிட்டதால் புலிகளின் பிரதிநிதிகள் எனக் கூறியிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம். பிக்கள் கெளரவமாக பதவி விலகவேண்டும். உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தபோதும் ஜனநாயகத்தை காப்பாற்ற ஐந்து வருடம் தனியாக நின்று போராடினேன். இதனால் துரோகி என விமர்சிக்கப்பட்டேன். ஆனால் நான் இன்று சரியான பாதையில் உள்ளேன். அதை நிரூபித்தும் விட்டேன்.

மூலம்/ஆக்கம் : ஊடக அறிக்கை


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply