பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் ஏ-9 போக்குவரத்துக்கு விடப்படும்
‘ஏ9’, ‘ஏ-32’ புத்தளம் – மன்னார் வீதி உட்பட வடக்கின் ஆறு பிரதான வீதிகளின் புனரமைப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைகள் அமைச்சர் டீ. பீ. ஏக்கநாயக்க தெரிவித்தார்.‘ஏ-9’ வீதியில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகள் நிறைவுற்றதும் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் அவ்வீதி போக்குவரத்துக்காக விரைவில் திறந்து விடப்படுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.
அமைச்சர் ஏக்கநாயக்க இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது:-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நெடுஞ்சாலைகள் அமைச்சர் என்ற வகையில் பிரிட்டன் அரசாங்கத்துடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையையடுத்து மாபே ஜெத்சன் நிறுவனத்தின் நிதியுதவியுடன் நாடளாவிய ரீதியில் 280 பாலங்கள் நிர்மாணிக்கும் நடவடிக்கைகள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
பிரதேசங்களின் தேவைகளைக் கருத்திற் கொண்டு எவ்வித அரசியல் கட்சி ரீதியான பாரபட்சமுமின்றி நாடளாவிய ரீதியில் முன்னெப்போதுமில்லாத வகையில் இவ் வீதியபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த வகையில் ஏ-9, ஏ-32, புத்தளம் – மன்னார், தலைமன்னார், முருங்கன் மற்றும் சிலாவத்துறை வீதிகளும் தற்போது புனரமைக்கப்பட்டு வருகின்றன. மேல் மாகாணத்தையும் தெற்கையும் இணைக்கும் வகையில் அமைந்துள்ள பெந்தரை பாலத்தின் நிர்மாணப் பணிகள் கடந்த ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்படாதிருந்தன. நான்கு கட்டங்களாக நிர்மாணிக்கப்பட வேண்டிய இப் பாலம் இரண்டாம் கட்டத்துடனேயே தடைப்பட்டுவிட்டது.
தற்போதைய அரசாங்கம், நெடுஞ்சாலைகள் அமைச்சின் கீழ் வரும் வீதிகள், மாகாண சபையின் கீழ் வரும் வீதிகள், பிரதேச சபை வீதிகள் என எந்த பாகுபாடுமின்றி சகல வீதிகள் பாலங்களையும் புனரமைப்புச் செய்து வருகிறது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply