வடக்கில் சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்த 21 பொலிஸ் நிலையங்கள்
வட மாகாணத்தில் வெகுவிரைவில் சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்தும் பொருட்டு 21 பொலிஸ் நிலையங்கள் நிறுவப்படவுள்ளதாக பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்கிரமரட்ன தெரிவித்தார். மன்னார் பொலிஸ் பிரிவில் ஏழு பொலிஸ் நிலையங்கள் தற்பொழுது நிறுவப்பட்டுள்ளதாகவும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மாங்குளம் ஆகிய மூன்று பொலிஸ் பிரிவுகளில் 14 பொலிஸ் நிலையங்கள் நிறுவப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
பொலிஸ் மாஅதிபர் ஜயந்த விக்கிரமரட்னவின் தலைமையில் நேற்றுக் காலை பொலிஸ் தலைமையகத்திலுள்ள விசேட செய்தியாளர் மாநாடு இடம்பெற்றது. இதன் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பொலிஸ் மாஅதிபர் இங்கு மேலும் தகவல் தருகையில்,
புலிகளின் பிடியிலிருந்து மீட்கப்பட்ட சகல பிரதேசங்களிலும் வெகுவிரைவில் சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் ஒரு அங்கமாகவே 21 பொலிஸ் நிலையங்கள் நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மன்னார் பொலிஸ் பிரிவில் மடு, விடத்தல்தீவு, இலுப்பக்கடவாய், முழங்காவில், சிலாவத்துறை, பண்டிவிரிச்சான் ஆகிய பிரதேசங்களில் ஏழு பொலிஸ் நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன.
எஞ்சியுள்ள 14 பொலிஸ் நிலையங்கள் வெகுவிரைவில் நிறுவப்படும் என்றார். இது தொடர்பாக மாதத்திற்கு ஒருமுறை விசேடமாக கூடி ஆராயப்படுவதாக தெரிவித்த அவர், வட மாகாண செயலணி நிறுவப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார். புதிய திட்டத்திற்கமைய பிரதி பொலிஸ் மாஅதிபர் (டி.ஐ.ஜி) ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மாங்குள பொலிஸ் பிரிவுடன் தற்போது இணைக்கப்பட்டுள்ளார் என்றார்.
இதேவேளை இந்த பிரதிப் பொலிஸ் மாஅதிபரின் கீழ் மூன்று சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் (எஸ். எஸ். பி.) நியமிக்கப்படவுள்ளனர்.
மாங்குளம் பொலிஸ் பிரிவில் – துணுக்காய், வட்டுவாக்கல், புலியங்குளம், ஜயபுரம், அக்கராயன் குளம், மல்லாவி, முறிகண்டி ஆகிய பிரதேசங்களில் பொலிஸ் நிலையங்கள் நிறுவப்படவுள்ளன. ஓமந்தை பிரதேசத்தில் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளது என்றார். முல்லைத்தீவு பொலிஸ் பிரிவில், அலம்பில், நெடுங்கேணி, குமுழமுனை, ஒட்டுச்சுட்டான் மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய பிரதேசங்களில் பொலிஸ் நிலையங்கள் நிறுவப்படவுள்ளன.
அத்துடன், கிளிநொச்சி பொலிஸ் பிரிவில் பரந்தன், ஆனையிறவு, சாலை ஆகிய பிரதேசங்களில் பொலிஸ் நிலையங்கள் நிறுவப்படவுள்ளன என்றும் பொலிஸ் மாஅதிபர் குறிப்பிட்டார். மிதிவெடிகள் அகற்றப்பட்டவுடன் இதற்கான நடவடிக்கைகள் மேலும் துரிதப்படுத்தப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்தச் செய்தியாளர் மாநாட்டில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர்களான இளங்ககோன், நிமல் மெதிவக, பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அனுர சிறிவர்தன, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களான ரஞ்சித் குணசேகர, ஐ. எம். கருணாரட்ன, எம். கே. டி. டபிள்யூ. அமரசிங்க ஆகியோர் கலந்து கொண்டனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply