தவறுகளை உணர்ந்து நாமாக திருந்திக் கொள்ளாவிட்டால் எம்மினம் எம்மை ஒதுக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை: ரெலோ எம்.பி. வினோ
தவறுகளை உணர்ந்து நாமாக திருந்திக் கொள்ளாவிட்டால், எம்மினம் எம்மை ஒதுக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை. வவுனியா நகரசபை மற்றும் யாழ். மாநகர சபைத் தேர்தல்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடாவிட்டால் ரெலோ அமைப்பு தனித்தோ அல்லது வேறு கட்சிகளுடன் இணைந்தோ போட்டியிடும். இவ்வாறு ரெலோ சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வினோநோகராதலிங்கம் தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
” தமிழ் மக்களின் எதிர்கால நலன்கருதி வட. கிழக்கைச் சேர்ந்த தமிழ் அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயற்பட வேண்டும் என்பது ஒட்டுமொத்த தமிழர்களின் விருப்பமாக உள்ளது.
ஆயுத போராட்ட ஆரம்ப காலங்களிலும், அரசியல் ரீதியான செயற்பாடுகளிலும் நாம் தொடர்ந்தும் தமிழ் இனத்திற்கு விமோசனம் பெற்றுக்கொடுக்காது ஏமாற்றியே வந்திருக்கின்றோம். தவறுகளை உணர்ந்து நாமாக திருந்திக் கொள்ளாவிட்டால், ஒற்றுமைப்படாவிட்டால், எம்மினம் எம்மை ஒதுக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை.
அதேவேளை, நடைபெறப் போகும் உள்ளூராட்சித் தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடாவிட்டால் நாம் தனித்தோ அல்லது வேறு கட்சிகளுடன் இணைந்தோ போட்டியிட பின் நிற்கப் போவதில்லை.
குறிப்பாக எம்மிலிருந்து அண்மையில் பிரிந்து ‘சிறீ ரெலோ’ என்ற பெயரில் இயங்கும் எமது உறுப்பினர்களையும் இணைத்துக்கொண்டு ஓரணியில், ஒன்றுபட்ட ரெலோ அமைப்பாக செயற்படுவது குறித்து அவர்களுடன் பேச்சு நடத்திக் கொண்டிருக்கின்றோம்.
அடுத்தவாரம் எமது தலைமைக்குழு இது தொடர்பாக விரிவான பேச்சுக்களை நடத்தவிருக்கின்றது. ஏனைய அமைப்புகளுடன் இராணுவ, அரசியல் ரீதியான முரண்பாடுகளை நாம் முன்னர் கொண்டிருந்தோம். இன்று நாம் இணைந்துகொள்ள முயன்று வருகின்றோம்.
இவ்வேளை, எமது முரண்பாடுகளைக் களைந்து நாம் ஏன் மீண்டும் இணைந்து செயற்படக்கூடாது என்ற கேள்வியும் பல உறுப்பினர்கள் மத்தியில் இயல்பாக எழுகிறது.
எமது முயற்சியிகள் அனைத்தும் தேர்தலை நோக்கமாக மட்டும் கொண்டதல்ல. ஆனால் இரு தேர்தல்களையும் ஆரம்பப் புள்ளியாகக் கொண்டு செயல்பட பொருத்தமான சந்தர்ப்பமாக இதனை நாம் கருதுகிறோம்.
எடுத்த எடுப்பிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அழைப்பை நிராகரித்து சில தமிழ்க் கட்சிகள் பழையவற்றை ஆராய முனைவது ஆரோக்கியமான தலைமைக்கு அழகானதல்ல எனவும் சுட்டிக் காட்டினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply