இத்தாலியில் கொரோனாவுக்கு பலி 1,441 ஆக உயர்வு
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, ஸ்பெயின் மற்றும் ஈரானில் அதிக பாதிப்பையும் உயிர் பலியையும் ஏற்படுத்தி வருகிறது.
இத்தாலியின் வடக்கு பிராந்தியத்தில் முதலில் பரவிய கொரோனா வைரஸ் கிட்டத்தட்ட 10க்கும் மேற்பட்ட நகரங்களில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ரோம், மிலன், வெணிஸ் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் வெளியே வர கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் இத்தாலியில் கொரோனா வைரசுக்கு தினமும் உயிர் பலி அதிகரித்தபடியே இருக்கிறது. நேற்று ஒரே நாளில் 175 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு பலி எண்ணிக்கை 1,441 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் நேற்று புதிதாக 3 ஆயிரத்து 497 பேர் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 157 ஆக உயர்ந்துள்ளது.
இத்தாலியில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு வேகமாக பரவி வருவதால் மக்கள் வெளியிடங்களுக்கு செல்ல வேண்டாம் என்றும், மருந்து, உணவு போன்ற அத்தியாவசிய பொருட்கள் வாங்க மட்டுமே வெளியில் வரும்படியும், வீட்டிலேயே இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது.
ஐரோப்பியாவில் இத்தாலிக்கு அடுத்து ஸ்பெயினில் கொரோனா பாதிப்பு அதிகமாக ஏற்பட்டு வருகிறது. அங்கு நேற்று ஒரே நாளில் 63 பேர் பலியாகி உள்ளனர். இதனால் அங்கு பலி எண்ணிக்கை 196 ஆக உயர்ந்துள்ளது.
மொத்தம் 6 ஆயிரத்து 391 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். புதிதாக 1,159 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் காரணமாக ஸ்பெயினில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அங்கும் மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மட்டும் வெளியே வரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேற்காசிய நாடான ஈரானில் கொரோனா வைரசுக்கு நேற்று 97 பேர் உயிரிழந்தனர். அங்கு பலி எண்ணிக்கை 611 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 12 ஆயிரத்து 729 (புதிதாக 1,365 பேர்) பாதிக்கப்பட்டுள்ளனர்.
தென்கொரியாவில் பலியானவர்களின் எண்ணிக்கை 75 ஆகவும். பாதிக்கப்பட்டவர்கள் 8 ஆயிரத்து 162 ஆகவும் உயர்ந்துள்ளது.
அமெரிக்காவில் நேற்று 8 பேர் உயிரிழந்துள்ளனர். அதனால் அங்கு பலி எண்ணிக்கை 57 ஆக உயர்ந்தது. மொத்தம் 2 ஆயிரத்து 836 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று புதிதாக 589 பேர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் நேற்று சீனாவில் 10 பேர், பிரான்சில் 12 பேர், இங்கிலாந்தில் 10 பேர், பிலிப்பைன்சில் 3 பேரும், நார்வே, நெதர்லாந்து, கிரீஸ் ஆகிய நாடுகளில் தலா 2 பேரும், சுவீடன், டென்மார்க், ஜப்பான், பெல்ஜியம், சுவேனியா, அயர்லாந்து, ஈராக், போலந்து, இந்தோனேஷியா, பல்கேரியா, அல்ஜீரியா, ஈக்வேடார் ஆகிய நாடுகளில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர். நேற்று மட்டும் 407 பேர் பலியாகி இருக்கிறார்கள்.
உலகம் முழுவதும் 152 நாடுகளில் கொரோனா வைரசுக்கு பலி எண்ணிக்கை 5 ஆயிரத்து 836 ஆக உயர்ந்துள்ளது. ஒட்டுமொத்தமாக ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 568 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply