புதின் பதவியை நீட்டிக்கும் சட்டத்துக்கு ரஷிய அரசியலமைப்பு நீதிமன்றம் ஒப்புதல்
ஒருங்கிணைந்த சோவித் யூனியனின் கேஜிஎப் எனப்படும் உளவு அமைப்பில் தனது வாழ்க்கையை தொடங்கியவர் விளாடிமிர் புதின்(67).1999-ம் ஆண்டு ஆகஸ்ட் 9-ம் தேதி ரஷியா பொருளாதார நெருக்கடியை சந்தித்தபோது அப்போதைய அதிபர் எல்ட்சின், விளாடிமிர் புதினை பொறுப்பு பிரதமராக முதல்முறையாக நியமனம் செய்தார்.
அப்போது அந்நாட்டில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய குண்டுவெடிப்பு தாக்குதலில் 300 பேர் கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பயங்கரவாதிகள் பதுங்கி இருந்ததாக கருதப்பட்ட பகுதிகளில் வான்வழியாக சென்று குண்டுகள் வீசப்பட்ட அதிரடி நடவடிக்கைகளால் புதின் ரஷிய மக்களிடையே புகழ்பெற்றார்.
இதையடுத்து, பல காரணங்களுக்காக அதிபராக இருந்த எல்ட்சின் தனது பொறுப்பை ராஜினாமா செய்து 1999-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி விளாடிமிர் புதினை ரஷியாவின் பொறுப்பு அதிபராக நியமணம் செய்தார்.
பின்னர், ரஷியாவின் அதிபர் அல்லது பிரதமர் ஆகிய இரண்டு பதவிகளில் ஏதேனும் ஒன்றில் தன்னை நிலைநிறுத்திவந்த புதின் கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் மிகப்பெரிய வெற்றிபெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் தொடச்சியாக இரண்டாவது முறையாக அதிபராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2024-வரை ரஷியாவில் புதினின் ஆதிக்கம் இருக்கும்.
இதற்கிடையில், ரஷியாவில் தற்போது நடைமுறையில் உள்ள அரசியல் சாசன சட்டத்தின்படி தொடர்ந்து இரண்டு முறைக்கு மேல் ஒருவர் அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாது. இதனால், 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் புதின் போட்டியிட முடியாத சூழல் இருந்து வந்தது.
இந்நிலையில், ஆளும் ஐக்கிய ரஷியா கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வலண்டினா அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான சட்டத்தை மீண்டும் புதுப்பிக்கவேண்டும் என்ற மசோதாவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இந்த மசோதாவின்படி பழைய நடைமுறைகள் அழிக்கப்பட்டு அதிபர் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான சட்டம் மீண்டும் முதலில் இருந்தே அமலுக்குவரும்.
அதாவது, ஏற்கனவே தொடர்ச்சியாக இரண்டு முறை அதிபர் தேர்தலில் போட்டியிட்டவர்கள் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடலாம்.
சுருக்கமாக கூற வேண்டுமானால் தற்போது அதிபராக உள்ள புதின் அடுத்துவரும் 2024-ம் ஆண்டு மற்றும் 2030-ம் ஆண்டு ஆகிய இரண்டு தேர்தல்களிலும் எந்தவித தடையும் இன்றி போட்டியிடலாம்.
பாராளுமன்ற உறுப்பினர் வலண்டினா தாக்கல் செய்த இந்த மசோதா பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் சமீபத்தி நிறைவேறியது.
இந்த மசோதா அதிபர் புதினின் ஒப்புதலுடன் சட்டமாக இயற்றப்பட்டது. இந்த புதிய சட்டத்துக்கு ஒப்புதல் அளித்து ரஷிய அதிபர் புதின் கடந்த 14-ம் தேர்தி கையொப்பமிட்டுட்டார்.
68 பக்கங்களை கொண்ட இந்த புதிய சட்டத்தின் நகல் ரஷிய அதிபரின் அலுவலகமான கிரெம்ளின் மாளிகை இணையத்தளத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வெளியிடப்பட்டது.
திருத்தப்பட்ட இந்த அரசியலமைப்பு சீர்திருத்தச் சட்டம் ரஷியாவின் அரசியலமைப்பு நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த சட்டத்துக்கு அந்நாட்டின் அரசியலமைப்பு நீதிமன்றம் இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இதைதொடர்ந்து, வரும் 2036-ம் ஆண்டு வரையில் புதின் அந்நாட்டின் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு எவ்வித தடையும் இல்லை.
ஆனால், இந்த சட்டம் தொடர்பாக அந்நாட்டு மக்களிடம் விரைவில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply