இத்தாலியில் ஒரே நாளில் 368 பேர் பலி : கொரோனா பீதியால் எல்லைகளை மூடிய அர்ஜென்டினா

சீனாவில் உருவாகி 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் கோரத்தாண்டவம் ஆடிவரும் கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் பீதியில் ஆழ்த்தி இருக்கிறது.நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் 10,982 பேர் புதிதாக இந்த வைரஸ் தொற்றுக்கு ஆளாகி இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து உள்ளது. ஒட்டுமொத்தமாக 6,685 பேரை கொரோனா வைரஸ் பலி கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு உலக அளவில் பீதி நிலவும் நிலையில், கொரோனா வைரசின் பிறப்பிடமான சீனாவில், அதன் தாக்கம் குறையத்தொடங்கி இருக்கிறது. அங்கு நேற்று முன்தினம் 14 பேர் மட்டுமே உயிரிழந்துள்ள நிலையில், நாட்டின் மொத்த சாவு எண்ணிக்கை 3,213 ஆகிவிட்டது.

சீனாவை தொடர்ந்து கொரோனா வைரசால் நிலை குலைந்திருக்கும் நாடுகளில் முக்கியமானது, இத்தாலி. இங்கு நேற்று ஒரே நாளில் மட்டும் 368 பேர் பலியாகி விட்டனர். இதன் மூலம் அங்கு பலி எணணிக்கை 1,809 ஆக அதிகரித்து இருக்கிறது. 24,747 பேர் வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதைப்போல ஈரானிலும் ஒரே நாளில் 129 பேர் பலியானதன் மூலம் 853 பேர் இதுவரை பலியாகி இருக்கின்றனர். அங்கு நோயாளிகளின் எண்ணிக்கையும் 14,991 ஆக உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் வெளிநாடு மற்றும் வெளி மாகாண பயணங்களை ரத்து செய்யுமாறு அரசு அறிவுறுத்தி உள்ளது.

ஈரானில் எம்.பி.க்கள், மூத்த அதிகாரிகள் என நாட்டின் உயர்மட்ட தலைவர்கள் பலர் கொரோனாவுக்கு பலியாகி இருக்கும் நிலையில், நாட்டின் மூத்த மத குருக்களில் ஒருவரான அயத்துல்லா ஹாசிம் பதேயும் நேற்று பலியானார்.

ஸ்பெயினில் ஒரே நாளில் சுமார் 1000 பேர் கொரோனாவிடம் சிக்கியுள்ள நிலையில், மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 8,744 ஆகி இருக்கிறது. பலி எண்ணிக்கையும் 297 ஆக உயர்ந்து விட்டது. அத்தியாவசிய பணிகள் தவிர பிற சேவைகள் அனைத்தையும் ரத்து செய்து, மக்களை வீடுகளில் தங்கியிருக்க அரசு வலியுறுத்தி உள்ளது.

தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவில் 56 பேர் வைரசால் பாதிக்கப்பட்டு, 2 பேர் உயிரிழந்திருக்கும் நிலையில், அங்கு மேலும் வைரஸ் பரவுவதை தடுக்க நாட்டின் எல்லைகளை அடுத்த 15 நாட்களுக்கு மூட அரசு முடிவு செய்துள்ளது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

கனடாவின் அனைத்து மாகாணங்களுக்கும் (313 பேர்) கொரோனா வைரஸ் பரவி இருப்பதாக நாட்டின் தலைமை பொது சுகாதார அதிகாரி தெரசா டாம் அறிவித்து இருக்கிறார்.

பிரான்சில் நேற்று முன்தினம் மட்டும் 29 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டுமொத்த சாவு எண்ணிக்கை 127 ஆக உயர்ந்து விட்டது. 5,423 பேர் தொற்றுக்கு ஆளாகி இருக்கின்றனர். அங்கு ஏற்கனவே கல்வி நிறுவனங்கள், அத்தியாவசியமற்ற பொது இடங்கள், கடைகள், உணவு விடுதிகள், கேளிக்கை விடுதிகள் என அனைத்து வணிக நிறுவனங்களும் மூடப்பட்டு உள்ளன.

தென்கொரியாவில் கொரோனாவுக்கு இதுவரை 76 பேர் பலியாகி இருக்கும் நிலையில், அனைத்து ஐரோப்பிய நாட்டு பயணிகளுக்கும் குடியுரிமை கட்டுப்பாடுகளை மேலும் இறுக்கி உள்ளது. நாட்டில் மொத்தம் 8,236 பேர் வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நிறுத்தப்பட்டு உள்ள கிராண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலில் இருந்த பிலிப்பைன்ஸ் நாட்டவர் 444 பேர் விமானம் மூலம் நேற்று சொந்த நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.

அமெரிக்காவில் 3,200-க்கு மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு 61 பேர் நேற்று முன்தினம் வரை வைரசுக்கு பலியாகி உள்ளனர். இதனால் அங்குள்ள ரஷிய தூதரகங்களில் வாடிக்கையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

பாகிஸ்தானில் மேலும் 42 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதன் மூலம் மொத்த நோயாளிகள் எண்ணிக்கை 94 ஆக உயர்ந்து உள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply