தேர்தலை பின் போட்டு, ஆபத்திலிருந்து நாட்டை காக்க அரசு முன்வர வேண்டும்

அரசாங்கம் கொரோனா கொடுமையை பயன்படுத்தி, எதிர்கட்சிகளை வீட்டுக்குள் முடக்கி வைத்து விட்டு, தேர்தலை நடத்தி அரசியல் இலாபம் பெற முயல்கிறது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தின் இரகசிய திட்டம் இதுவாகும். நாளுக்கு நாள் அரசாங்கத்தின் செல்வாக்கும், சொல்வாக்கும் நாட்டுக்குள் படு வீழ்ச்சியை நோக்கி செல்வதால், அரசாங்கமும், அதன் இரகசிய நண்பர்களும் கொரோனா கொடுமைக்குள்ளேயும் தேர்தலை நடத்த முனைகிறார்கள். 

இன்றைய நிலைமையில் தேர்தல் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டால், இலட்சக்கணக்கான மக்கள் மிகப்பெரும் சுகாதார ஆபத்துகளை எதிர்நோக்க வேண்டி வரும். ஆகவே தேர்தலை பின் போட்டு விட்டு, அரசியல் கட்சி பேதங்களுக்கு அப்பால் சிந்தித்து, நாட்டை காக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை, தமிழ் முற்போக்கு கூட்டனி கோருகிறது என முன்னாள் தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சரும், கொழும்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார். 

இதுபற்றி தனது டுவீட்டரில் கருத்து தெரிவித்துள்ள அவர், அரசியல் இலாபம் பெரும் நோக்கில் செயற்பட வேண்டாம் என, “தேசிய வீரர்கள்” என்று கூறி பதவிக்கு வந்த இந்த பிற்போக்கு அரசாங்கத்துக்கு நாம் கூறிவைக்க விரும்புகிறோம். 

சில தனியார் மற்றும் அரசாங்க தொலைகாட்சிகளை பயன்படுத்தி, தமது அணியினரை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட வைப்பது. அதேவேளை எதிரணியினரை கொரோனா ஆபத்தை காட்டி வீட்டுக்குள் முடக்கி வைப்பது. இதுதான் இந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் திட்டம். 

ஆட்சிக்கு வந்த நூறு நாட்களுக்குள்ளேயே, பசுத்தோல் போர்த்திய நரியான இந்த அரசாங்கத்தின் சாயம் வெளுத்து உண்மை சொரூபம் தெரிய ஆரம்பித்து விட்டது. வாக்களித்த சிங்கள மக்களே இன்று அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கிறார்கள். ஆட்சிக்கு வந்தவர்கள், செய்தவைகள் என்று எதுவும் சொல்லிக்கொள்ள கிடையாது. எமது ஆட்சியின் மக்கள் நல திட்டங்களை நிறுத்தியதுதான், இந்த அரசாங்கம் செய்த ஒரே வேலை. 

எனவே இன்று இந்த கொரோனா கொடுமை, தனக்கு கிடைத்த பெரும் கொடை என இந்த அரசாங்கம் நினைக்கிறது. இதை பயன்படுத்தி, மக்களுக்கு உண்மையை எடுத்து கூறி இந்த அரசாங்கத்தின் உண்மை சொரூபத்தை மேலும் எடுத்து கூறும் சந்தர்ப்பத்தை, எதிர்கட்சிகளுக்கு வழங்காமல் இருக்க அரசாங்கம் விரும்புகிறது. கொரோனா மூலம் எதிர்கட்சிகளை வீட்டுக்குள் முடக்க அரசு நினைக்கிறது. அதன் பின் உடனடியாக தேர்தலை நடத்தவே அரசாங்கம் விரும்புகிறது. 

இந்த இரகசிய அரசியல் நிலைப்பாட்டை நிறுத்தி வைத்து விட்டு, உடனடியாக தேர்தலை பின் போட்டு, கொரோனா கொடுமையில் இருந்து, நாட்டை காக்க, அரசியல் கட்சி பேதங்களுக்கு அப்பால் சென்று சிந்திக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை நாம் கோருகிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply