எனது அதிகாரத்துக்குட்பட்டு சமூகம், மனித நீதி என்ற முறையில் நடவடிக்கை எடுப்பேன் : நீதிபதி மாணிக்கவாசகம் இளஞ்செழியன்
திருகோணமலை மக்கள் அன்பானவர்கள், அமைதியை விரும்புபவர்கள். ஆத்திரத்தை வெளிப்படுத்தாதவர்கள். அடிபட்டு நொந்து “பிச்சை வேண்டாம் நாயைப்பிடி’ என்று வாழ்ந்து வருபவர்கள். இடமாற்றம் இரத்துச் செய்யப்பட்டு மீண்டும் திருகோணமலை வந்துள்ளேன். அநீதி எங்கு நிகழ்ந்தாலும் எனது அதிகாரத்துக்குட்பட்டு சமூகம், மனித நீதி என்ற முறையில் நடவடிக்கை எடுப்பேன் என்று திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி எம். இளஞ்செழியன் தெரிவித்தார்.
ஆறு கோடி ரூபா செலவில் நிக்கோட் திட்டிடத்தின் நிதி உதவியுடன் திருகோணமலை நகர சபையின் நூறாண்டுக்கு மேல் பழைமை வாய்ந்த பொது நூலகத்திற்கான நவீன கட்டத்தை கடந்த சனிக்கிழமை மாலை திறந்து வைத்து புதிய நூலக அரங்கில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
முன்னதாக பிரதம அதிதியான இளஞ்செழியன், கௌரவ அதிதியான நிக்கோட் திட்டப்பணிப்பாளர் த.லங்காநேசன், விசேட அதிதிகாளான மாகாணக்கல்விப் பணிப்பாளர் எஸ்.தண்டாயுதபாணி, திருகோணமலை பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் கே.குணநாதன் ஆகியோர் திருகோணமலை நகரசபையின் தலைவர் எஸ்.கௌரிமுகுந்தனால் வரவேற்கப்பட்டனர். நிக்கோட் திட்டப்பணிப்பாளர் லங்காநேசன் முதலில் புதிய நூலகக் கட்டிடத்திற்கு முன்னால் அமைக்கப்பட்டுள்ள சரஸ்வதிதேவிக்குரிய ஆலயத்தை திறந்துவைத்தார். அதன்பின்னர் நவீன நூல்நிலையக் கட்டிடத்தை நீதிபதி இளஞ்செழியன் திறந்து வைத்தார். தொடர்ந்து ஏனைய அதிதிகள் நூல்நிலையத்தின் பல பிரிவுகளை திறந்து வைத்தனர். பின்னர் நூலக அரங்குகளில் நடந்த கூட்டத்திற்கு திருகோணமலை நகரசபையின் தலைவர் கௌரிமுகுந்தன் தலைமை வகித்தார்.
நீதிபதி இளஞ்செழியன் தொடர்ந்து உரையாற்றுகையில்;
“அதிகாரம் துஷ்பிரயோகம் செய்யப்படக்கூடாது. இருக்கும் அதிகாரங்கள் பயன்படுத்தப்படவேண்டும். குற்றச் செயல்கள் தடுக்கப்டவேண்டும். நீதிமன்றங்கள் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி குற்றவாளிகளைத் தண்டிக்கவேண்டும். தவறினால் நீதிமன்றங்கள் நீதிவழங்கா என்ற எண்ணம் மக்களிடையே ஏற்படும். திருகோணமலைக்கு வந்த பின்னர் கொலை வழக்குகள் மற்றும் ஏனைய வழக்குகள் விசாரிக்கப்பட்டு குற்றவாளிகளாகக் காணப்பட்டவர்களுக்கு மரண தண்டனை மற்றும் சிறைத்தண்டனைகள் வழங்கப்பட்டன. திருகோணமலை மாவட்டத்தில் குற்றச்செயல்கள் அதிகமாகக் காணப்படும் பிரதேசங்களில் குற்றச் செயல்கள் குறைவதற்கு இது உதவியது’
“வவுனியாவில் ஆயிரம் சடலங்களைப் பார்வையிட்டு மரணவிசாரணை நடத்திய என்னை திருகோணமலையில் வர்ஷா என்ற ஆறுவயது மாணவியின் கொலை நிலை குலையவைத்தது’ என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply