கூட்டமைப்பு பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்கப்படவில்லை; இந்தியாவில் இலங்கைக்குப் பெரிய சந்தை வாய்ப்பு திறந்துள்ளது: சிவ்சங்கர் மேனன்

தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் டெல்லி வந்துள்ளார்கள். அவர்கள் அவ்வப்போது இங்கு வந்து டெல்லியில் உள்ள பல்வேறு தலைவர்களுடன் பேசிக் கொண்டுதான் உள்ளனர். இருப்பினும் பிரதமரை சந்திக்க அவர்களுக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை என்பதை உறுதியாக கூறுகிறேன் என இலங்கையிலிருந்து வந்திருந்த பத்திரிக்கையாளர்கள் சிலரை இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் மேனன் சந்தித்து பேசிய போது குறிப்பிட்டார். அவர்கள் மத்தியில் மேனன் கருத்து தெரிவிக்கையில்; 

இந்தியாவில் இலங்கைக்குப் பெரிய சந்தை வாய்ப்பு திறந்துள்ளது. அதற்கான வாய்ப்புகளை இலங்கை முறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஜவுளித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும். இந்தியாவும், இலங்கையும் இணைந்து பல அற்புதங்களை நிகழ்த்திக் காட்ட முடியும் என்றார்.

மேலும் அவர்களிடையே மேனன் பேசுகையில், இலங்கை அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை மறு சீரமைப்பு குறித்துதான் இருக்க முடியும். இதை இலங்கை அரசுதான் தீர்மானிக்க முடியும்.

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கான தீர்வை அந்த நாடுதான் முன் வைக்க வேண்டும். இது அந்த நாட்டின் உள் விவகாரம். இந்த மாதிரியான தீர்வைத்தான் செய்ய வேண்டும் என இலங்கைக்கு இந்தியா எதையும் கூறாது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச என்ன முடிவெடுத்தாலும் அதை இந்தியா உறுதியுடன் ஆதரிக்கும் என்று கூறியுள்ளார் வெளியுறவுத் துறை செயலாளர் மேனன்.

இந்தியாவோ அல்லது நார்வே நாட்டின் வேலை அல்ல இது. இந்த நாடுகள் இலங்கை எடுக்கும் முடிவுகளில் தலையிடவும் முடியாது. இலங்கைக்கு நல்லது எது என்பதை பிறர் சொல்லத் தேவையில்லை.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இதுகுறித்து தெளிவாகவே கூறியுள்ளார். அது என்னையும் கவர்ந்தது. இலங்கைக்கு எது சரியானது என்பது குறித்து இலங்கை அரசு எடுக்கும் எந்த வகையான முடிவுகளுக்கும் இந்தியா உறுதியுடன் தொடர்ந்து ஆதரவு தரும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருகையால் இலங்கை அரசுத் தரப்பில் எந்தவித பீதியும் அடையத் தேவையில்லை.

இந்தியா, இலங்கைக்கு இடையே, பாதுகாப்பு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என நீண்ட காலமாக பேசப்பட்டு வருகிறது. விரைவில் அது நிறைவேறும்.

வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் மீது தமிழர்கள் தாக்குதல் நடத்துவதை வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் விரும்பவில்லை.

தற்போது இலங்கையில் போர் முடிந்து விட்டது. எனவே இந்திய, இலங்கை ஊடகங்கள் போர் குறித்த செய்திகளை விட்டு விட்டு வேறு செய்திகளுக்குப் போவது நல்லது என்றார்.

மூலம்/ஆக்கம் : TELOnews


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply