கிராமிய மின் விஸ்தரிப்புத் திட்டம்: இலங்கை – ஈரான் ஒப்பந்தம்

கிராமிய மின் விநியோக திட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்கென ஈரான் அரசு 106 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்கியுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விசேட வேண்டுகோளுக்கு இணங்க ஈரான் அரசு கடன் அடிப்படையில் நிதி உதவியை செய்துள்ளது. மின்சக்தி அமைச்சர், ஜோன் செனவிரட்ணவின் தலைமையில் இதற்கான ஒப்பந்தம் கடந்த 10ஆம் திகதி (புதன்கிழமை) அமைச்சு அலுவலகத்தில் கைச்சாத்தானது.

அமைச்சின் செயலாளர் எம். எம். சி. பர்டினாண்டோ, ஈரான் அரசின் சுனீர் மின்சார கம்பனியின் முகாமைத்துவ பணிப்பாளர் ரேசா எபட்சாடென் மற்றும் ஈரானிய தூதுவர் ரஹிமி கோர்ஜி, இலங்கை மின்சார சபையின் தலைவர் ஈ. ஏ. எஸ். கே. எதிரிசிங்க ஆகியோர் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். கிராமிய மின் விநியோக திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக பெறப்படும் 106 மில்லியன் அமெரிக்க டொலர்களும் மின்சார வசதியற்ற சுமார் 1000 கிராமங்களில் வாழும் சுமார் 1,80,000 பேருக்கு மின் வசதிகள் பெற்றுக்கொடுக்கப் பயன்படுத்தப்படும் என்றும் மின் சக்தி அமைச்சு தெரிவிக்கிறது.

100 கே. வி. கொண்ட சுமார் 1000 உப நிலையங்கள் மற்றும் திரீபேஸ் மின் கம்பியில் 4000 கிலோ மீற்றருக்கு இணைப்பை வழங்கவும் முடியும் எனவும் அமைச்சு அறிவிக்கிறது.

ஈரான் அரசு 65 மில்லியன் அமெரிக்க டொலர்களையே பெற்றுக்கொடுக்க முன்வந்திருந்தது. எனினும் ஜனாதிபதியின் விசேட வேண்டுகோளையடுத்து இதனை 106 மில்லியன் அமெரிக்க டொலர்களாக வழங்குவதற்கு முன்வந்துள்ளது.

இந்த நிகழ்வின் போது இலங்கை மின்சார சபையின் மேலதிக பொது முகாமையாளர்களான ரஞ்ஜித் குணவர்தன. எஸ். ஜயவர்தனா, ஈரான் சுனீர் நிறுவன திட்டப் பணிப்பாளர் மொஹமட் நெரேஷன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply