மே தினம் பற்றிய ஒரு பார்வை : கட்டாயம் தெரிந்து கொள்ளவேண்டியவை

மே தினம் வந்தது எப்படி? உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்கள் மே முதலாம் திகதியை மே தினம் என்றும் தொழிலாளர் தினம் என்றும் கொண்டாடி மகிழ்கிறார்கள். ஆனால், கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இம்முறை பொதுவெளியில் மே தினக் கூட்டங்களையோ, பேரணிகளையோ நடத்துவதற்கு முடியா சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.எனினும், இத்தினத்தை நினைவுகூரும் வகையில் இணையம் ஊடாக நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு 12 முதல் 18 மணி நேரம் வரை வேலை செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது.

குறைந்த வேலை நேரத்துக்காக நடத்தப்பட்ட தொழிலாளர்களின் போராட்டம், மே தினம் உருவாவதற்கு முக்கிய காரணமாய் அமைந்தது. தொழிலாளர்களின் இந்தக் கோரிக்கை மிகப்பெரிய அரசியல் முக்கியத்துவத்தைக் கொண்டிருந்தது. அமெரிக்காவில் தொழிற்துறை ஒரு அமைப்பாக வளர்ந்த பொழுது இப்போராட்டம் வெளிப்பட்டது.

இதற்கு எதிரான குரல்கள் பல்வேறு நாடுகளில் ஆங்காங்கே எழத் தொடங்கியன. இதில் குறிப்பிடத்தக்கது இங்கிலாந்தில் தோன்றிய சாசன இயக்கம் (Chartists). 6 முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்து தொடர் இயக்கங்களை நடத்தியது. அதில் குறிப்பிடத்தக்கது 10 மணி நேர வேலை என்ற கோரிக்கை.

1830 ஆம் ஆண்டு, பிரான்சில் நெசவுத் தொழிலாளர்கள் தினமும் 15 மணி நேரம் உழைத்து வந்தனர்.

இதனை எதிர்த்து அவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 1834 இல் ஜனநாயகம் அல்லது மரணம் என்ற வாசகத்தை முன்வைத்துக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். ஆனால், இது தோல்வியில் முடிந்தது. அவுஸ்திரேலியா விலுள்ள மெல் போர்னில் கட்டிடத் தொழிலாளர்கள் 1856 இல் முதன்முதலாக 8 மணி நேர வேலை என்ற கோரிக்கையை முன்வைத்தனர். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வெற்றியும் பெற்றனர்.

1896 ஏப்ரலில் லெனின் மே தினத்திற்காக எழுதிய சிறுபிரசுரத்தில், ரஷ்யத் தொழிலாளர் களின் நிலைமை குறித்து விரிவாக அலசினார். மேலும், ரஷ்யத் தொழிலாளர்களின் பொருளாதாரப் போராட்டம் அரசியல் போராட்டமாக எழுச்சி கொள்ள வேண்டும். என்பதையும் வலியுறுத்தினார். தொழிலாளி களின் 8 மணி நேர வேலைக்கான போராட்டங்களே ரஷ்யப் புரட்சிக்கு வித்திட்டது எனலாம்.

அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர் இயக்கங்களை இணைத்து, அமெரிக்கத் தொழிலாளர் கூட்டமைப்பு என்ற இயக்கம் உருவாக்கப்பட்டது.

இந்த இயக்கம் 1886, மே 1 ஆம் நாள் நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தது. இந்த இயக்கமே மே தினம் தோன்றக் காரணமாக இருந்தது எனலாம்.

1889 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிசில் சோசலிசத் தொழிலாளர்களின் சர்வதேசத் தொழிலாளர் பாராளுமன்றம் கூடியது. 18 நாடுகளிலிருந்து 400 பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி நேரப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என்று முடிவு செய்தனர்.

1890 மே 1 ஆம் நாள், அனைத்துலக அளவில் தொழிலாளர்கள் இயக்கங்களை நடத்திட அறைகூவல் விடுக்கப்பட்டது. இந்த அறைகூவலே, மே முதல் நாள் சர்வதேச தொழிலாளர் தினமாக – மே தினமாக வருவதற்குக் காரணமாக அமைந்தது. அடுத்த ஆண்டிலிருந்து உலக நாடுகள் பலவற்றில் விடுமுறையும் அறிவிக்கப்பட்டது.

இந்நாட்டில் (அமெரிக்காவில்) ஆரம்ப நாட்களில் பல வேலை நிறுத்தங்கள் நிகழ்ந்தன. ‘அதிக ஊதியம் வேண்டும்’ என்பதுதான் இந்த வேலைநிறுத்தங்களில் முக்கிய கோரிக்கையாக எழுப்பப்பட்டது. இருந்த போதிலும் தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளை வகுத்த போதெல்லாம் குறைந்த வேலை நேரம், சங்கம் சேரும் உரிமை போன்ற பிரச்சினைகளை முன்வைத்தனர். தொழிலாளர்கள் வெகுவாக சுரண்டப்பட்ட காலகட்டம் அது. நீண்ட வேலை நேரங்கள் அவர்களை மேலும் துன்பப்படுத்தின. எனவே வேலை நேரம் குறைக்கப்பட வேண்டும் என்பது கோரிக்கையாக எழுப்பப்பட்டது.

‘அதிகாலை முதல் அந்திசாயும் வரை’ என்பதுதான் அப்போதெல்லாம் வேலைநாள். இதனால் ஏற்பட்ட மனக்குமுறல்களை அமெரிக்கத் தொழிலாளர்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்திலேயே வெளிக்காட்டினர். பதினாறு, பதினேழு ஏன் பதினெட்டு மணிநேர வேலை என்பதெல்லாம் அப்போது சாதாரண விஷயங்கள், 1806-ம் ஆண்டு பிலடெல்பியா நகரத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அவர்களின் தலைவர்கள் மீது சதி வழக்கு போடப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது தொழிலாளர்கள் பத்தொன்பது, இருபது மணி நேரங்கள் வேலை வாங்கப்பட்டார்கள் என்ற விஷயம் வெளியே வந்தது.

1820 மற்றும் 30-களில் வேலை நேரத்தைக் குறைக்க வேண்டும் என்று பற்பல வேலைநிறுத்தங்கள் நிகழ்ந்தன. பத்து மணி நேர வேலைநாள் என்ற கோரிக்கை பல தொழில் மையங்களில் முன் வைக்கப்பட்டது. பிலடெல்பியா நகர இயந்திரத் தொழிலாளர்களின் சங்கம்தான் உலகின் முதற் தொழிற்சங்கமாக கருதப்படுகிறது.

இந்த தொழிற்சங்கம் உருவான இரு ஆண்டுகளுக்குப் பின்புதான் இங்கிலாந்தில் தொழிற்சங்கங்கள் உருவாகத் துவங்கின. பத்து மணி நேர வேலை நாள் என்ற கோரிக்கையை முதன் முதலாக வைத்த பெருமை இச்சங்கத்துக்கே உண்டு. 1827-ல் பிலடெல்பியாவில் கட்டிடங்கட்டும் தொழிலாளர்கள் நடத்திய வேலைநிறுத்தத்தில்தான் இந்தக் கோரிக்கை பிரதானமாக வைக்கப்பட்டது. 1834-ல் நியூயோர்க்கில் ரொட்டி தொழிலாளர்கள் எகிப்திய அடிமைகளைக் காட்டிலும் அதிகம் துன்புற்றனர். நாளொன்றுக்கு அவர்கள் பதினெட்டிலிருந்து இருபது மணி நேரம் வேலை செய்ய வேண்டி வந்தது என்ற செய்தியை அப்போது வெளியான ‘தொழிலாளருக்காக வாதிடுபவன்’ (Workingmen’s Advocate) என்ற பத்திரிகை வெளியிட்டது. பத்துமணி நேர வேலை நாளுக்கான இப்போராட்டங்கள் விரைவிலேயே ஒரு இயக்கமாக உருவெடுத்தன்.

1837-ல் ஏற்பட்ட நெருக்கடி ஒரு தடையாக இருந்தபோதிலும் வேன் பியுரன் தலைமையிலான அரசாங்கம், அரசு ஊழியர்கள் அனைவருக்கும் பத்து மணி நேர வேலைநாள் அறிவித்தது. எல்லோருக்கும் பத்து மணி நேர வேலை நாள் என்பதற்காக போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது. பல தொழிற்சாலைகளில் இக்கோரிக்கை வெற்றியடைய, உடனேயே தொழிலாளர்கள் 8 மணி நேர வேலை நாள் என்ற கோஷத்தை எழுப்பினர்.

தொழிற்சங்க இயக்கத்தின் அதிவேக வளர்ச்சியால் 1850-களில் இக்கோரிக்கை புதிய உத்வேகத்தை அடைந்தது. 1857-ல் ஏற்பட்ட நெருக்கடி இந்த உத்வேகத்திற்கு ஒரு தடையானது. இருந்தபோதிலும் நன்கு வளர்ச்சி பெற்ற தொழிற்சங்கங்கள் அதற்கு முன்பே இக்கோரிக்கையை அடைந்தன. இவ்வாறு குறைந்த வேலை நேரத்துக்கான போராட்டம் அமெரிக்காவில் மட்டும் நிகழவில்லை. முதலாளித்துவத்தின் கீழ் தொழிலாளர்கள் சுரண்டப்பட்ட எல்லா வளரும் நாடுகளிலும் இப்போராட்டங்கள் நிகழ்ந்தன. உதாரணமாக வெகு தூரத்தில் இருந்த அவுஸ்திரேலியாவில் கட்டிடத் தொழிலாளர்கள் ‘8 மணி நேர வேலை, 8 மணி நேர பொழுதுபோக்கு, 8 மணி நேர ஓய்வு’ என்ற கோரிக்கையை முன் வைத்து 1858-ல் அதை அடைவதில் வெற்றியும் பெற்றனர்.

எட்டு மணி நேர இயக்கம் அமெரிக்காவில் துவங்கியது.

1884-ல் அமெரிக்காவில் 8 மணி நேர இயக்கத்தின் போது வெடித்த போராட்டங்கள்தான் மே தினம் உருவாவதற்கு நேரடியான காரணமாய் அமைந்தன. ஆனாலும் இதற்கு ஒரு தலைமுறை முன்பே ‘தேசிய தொழிற்சங்கம்’ குறைந்த வேலை நேரத்துக்கான கோரிக்கையை முன்வைத்து பரந்த இயக்கத்தையே நடத்தியது. ‘தேசிய தொழிற் சங்கம்’ அமெரிக்க தொழிலாளி வர்க்கத்தின் போர்க்குணமிக்க ஸ்தாபனமாக அப்போது விளங்கியது.

1886 மே முதல் நாள் முதல் சட்டபூர்வமான வேலைநாள் என்பது எட்டு மணி நேரம்தான் இருக்க வேண்டும் என்று அமெரிக்கா மற்றும் தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு தீர்மானிக்கிறது. எனவே எல்லா தொழிலாளர் அமைப்புகளும் தங்கள் அதிகார வரம்பிற்குரிய இடத்தில் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இத்தீர்மானத்திற்கு ஏற்ப தங்கள் சங்க விதிகளை அமைத்துக் கொள்ளுமாறு இம்மாநாடு பரிந்துரைக்கிறது.”

எட்டு மணி நேர வேலை நேரத்தை எப்படி கொண்டு வருவது என்பது பற்றி கூட்டமைப்பு தீர்மானத்தில் ஏதும் சொல்லப்படவில்லை. இதன் உறுப்பினர்களின் எண்ணிக்கை 50,000-க்கு உட்பட்டது. தங்கள் உறுப்பினர்கள் வேலை செய்யும் கடை, ஆலை, சுரங்கங்களில் போராடி இன்னும் அதிகமான தொழிலாளர்களைத் திரட்ட வேண்டும் என்பதை அது அறிந்திருந்தது. அப்போதுதான் எட்டு மணி நேர வேலை நாளை சட்டபூர்வமாக்க வேண்டும் என்பதை அறிவிக்க முடியும் என்பதையும் உணர்ந்திருந்தது.

1886, மே முதல் நாள் 8 மணி நேர வேலைக்காக போராடும் தொழிலாளர்களுக்கு உதவும் பொருட்டே “தீர்மானத்திற்கேற்ப சங்க விதிகள் அமைய வேண்டும்” என அறிவித்திருந்தது.

வேலை நிறுத்தத்தின் போது வெகு நாட்கள் வெளியே தங்க நேரிடலாம். அப்போது சங்கத்தின் உதவி தேவைப்படும். மேலும் இவ்வேலை நிறுத்தம் தேசிய அளவில் நடைபெறுவதாலும் இணைக்கப்பட்டுள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் அமைப்புகளும் கலந்து கொள்வதாலும் அவர்கள் விதிப்படி தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்திற்கு தங்கள் உறுப்பினர்களின் ஒப்புதலைப் பெற வேண்டியது அவசியமாகிறது. இங்கு ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். இந்த கூட்டமைப்பானது தற்போது உள்ள அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பை போலவே சுயேச்சையாக கூட்டமைப்பு முறையில் ஏற்பட்டது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply