ஊரடங்கின்போது அச்சுறுத்தும் உடையில் நடமாடும் மர்ம மனிதரால் பீதி

இங்கிலாந்து நாட்டின் நார்விச் நகரின் கெல்ஸ்டன் பகுதியில் உள்ள தெருக்களில் கடந்த சில வாரங்களாகவே தலை முதல் கால் வரை உடலை முழுமையாக மறைக்கும் விதமாக நீண்ட ‘தொளதொள’ கருப்பு நிற அங்கி, தொப்பி, பூட்சுடன் ஒரு மர்ம மனிதர் நடமாடி வருகிறார்.

ஏற்கனவே, கொரோனா வைரஸ் பரவலால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் வீடுகளுக்குள் வாரக்கணக்கில் முடங்கிக் கிடக்கும் நார்விச் நகர மக்கள் இதைக்கண்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில், அந்த மர்ம மனிதரின் உருவத்தை படமெடுத்து ஜேட் என்ற பெண் சமூகவலைத் தளங்களிலும் பகிர்ந்துள்ளார்.

அந்த மனிதர் அணிந்துள்ள அங்கி 17-ம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் பிளேக் நோய் பரவியபோது மருத்துவர்கள் தங்கள் பாதுகாப்பிற்காக அணிந்த அங்கி, தொப்பி, பூட்ஸ், கூம்பு முக கவசம் போல இருப்பது தெரியவந்துள்ளது.

இந்த மனிதரை படம்பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட ஜேட் கூறுகையில் “ஏற்கனவே எங்கள் பகுதியில் முக கவசம் அணிந்திருப்பவர்களை கண்டாலே எல்லா குழந்தைகளும் பயந்து நடு நடுங்குகின்றன. எனது தாயாருக்கும் முக கவச ‘போபியா’ உள்ளது. இந்த மனிதரைப் பார்த்தால் அவர்கள் இன்னும் அச்சம் அடைகிறார்கள். அவர் எங்கிருந்து வருகிறார், எங்கே போகிறார்? என்பது தெரியவில்லை. மேலும் கடும் வெயில் கொளுத்தும் வேளையில் அந்த மனிதர் பட்டப்பகலில் இதுபோன்ற நீண்ட அங்கியை ஏன் அணிந்து நடமாட வேண்டும்? இது பொதுமக்களையும், குழந்தைகளையும் அச்சுறுத்தும் செயலாகும்” என்று கவலை தெரிவித்தார்.

இது குறித்து போலீசின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது

இதைத்தொடர்ந்து நார்விச் போலீசார் கருப்பு அங்கி, தொப்பி, பூட்ஸ் சகிதமாக உலா வரும் அந்த மர்ம மனிதரை வலைவீசி தேடி வருகின்றனர்.

இதுவரை அந்த மர்ம நபர் அப்பகுதியில் எந்த குற்றச் செயல்களிலும் ஈடுபட்டதாக தெரியவில்லை. எனினும் மக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் போலீசார் அவரை தேடிப்பிடிக்கும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த மர்ம மனிதர் கொரோனா பரவல் காரணமாக தனது பாதுகாப்பிற்காக இப்படி உடை அணிந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply