கொரோனா வைரஸ் தாக்குதல், 2-ம் உலகப்போரைவிட மோசமானது : டிரம்ப் வேதனை
கொரோனா வைரஸ் என்னும் கண்ணுக்குத் தெரியாத எதிரி, அமெரிக்காவில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. சீனாவில் தோன்றிய இந்த வைரஸ், அந்த நாட்டைவிட, உலகின் பிற எந்தவொரு நாட்டையும் விட அமெரிக்காவில்தான் பெரும்பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
அங்கு 12 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த வைரஸ் தொற்று தாக்கி உள்ளது. 74 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கொன்றிருக்கிறது.
ஆனாலும் அதன் தாக்குதல் இன்னும் தொடர்கதையாய் நீளுகிறது. அத்துடன் அந்த நாட்டின் பொருளாதாரம் முற்றிலும் சீர்குலைந்து போய் விட்டது.
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் நேற்று முன்தினம் கொரோனா வைரசுக்கு எதிரான போரில் முன்நின்று போராடுகிற நர்சுகள் மத்தியில் முதலில் பேசினார். அடுத்து நிருபர்கள் மத்தியில் பேசினார். இரு நிகழ்வுகளின்போதும் அவர் வேதனையுடன் கூறியதாவது:-
கொரோனா வைரஸ் தாக்குதல், பியர்ல் துறைமுக தாக்குதலை விட மோசமானது. இது உலக வர்த்தக மைய கட்டிடத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை விட மோசமானது.
(பியர்ல் துறைமுக தாக்குதல் என்பது 2-ம் உலகப்போரின்போது, 1941-ம் வருடம், டிசம்பர் 7-ந் தேதி அமெரிக்க கடற்படை தளமான ஹவாய் தீவின் பியர்ல் துறைமுகத்தின்மீது ஜப்பான் கடற்படை நடத்திய மோசமான தாக்குதலை குறிக்கும். இந்த தாக்குதலில் அமெரிக்காவின் 4 போர்க்கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டன. 188 போர் விமானங்கள் வீழ்த்தப்பட்டன. 2,400 அமெரிக்க கடற்படை வீரர்கள் கொல்லப்பட்டனர். உலக வர்த்தக மைய தாக்குதல் என்பது 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதி அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்டகன் மற்றும் நியூயார்க் உலக வர்த்தக மைய கட்டிடம் ஆகியவற்றின் மீது பின்லேடனின் அல்கொய்தா பயங்கரவாதிகள் விமானங்களை மோதி கொடூர தாக்குதல் நடத்தி 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கொன்று குவித்த தாக்குதல் ஆகும்).
அமெரிக்காவில் இப்போது நேர்ந்திருப்பது, இதுவரை நேர்ந்திராத ஒன்று. இது போன்று ஒருபோதும் நடந்து விடக்கூடாது. இதை (சீனாவால்) தடுத்திருக்க முடியும். இதை சீனாவில் தடுத்து நிறுத்தி இருக்கலாம். ஆனால் அதை செய்யவில்லை.
பியர்ல் துறைமுக தாக்குதலில், உலக வர்த்தக மைய தாக்குதலில் கொல்லப்பட்டவர்களைவிட அதிக எண்ணிக்கையிலானவர்கள் இந்த கொரோனா வைரஸ் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். உலக வர்த்தக மைய தாக்குதலில் 3 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். அவர்களை விட பல மடங்கிலானவர்கள் இப்போது கொரோனா வைரஸ் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். துரதிர்ஷ்டவசமாக இதை நாங்கள் ஒரு போராகவே பார்க்கிறோம்.
இந்த அணி சேர்க்கை, கொரோனா வைரஸ் போருக்கு எதிரானது. பல விதங்களில் இந்த கொரோனா வைரஸ் கடினமான எதிரி. நாங்கள் எங்கள் கண்களுக்கு தெரிந்த எதிரிகளுக்கு எதிராக நன்றாக செயல்பட்டுள்ளோம். ஆனால் கொரோனா வைரஸ், கண்ணுக்கு தெரியாத எதிரி. ஆனாலும் நாங்கள் நன்றாகவே செயல்பட்டு வருகிறோம்.
கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதில் வாஷிங்டன் வெள்ளை மாளிகை கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்குழு நன்றாகவே செயல்பட்டு வந்துள்ளது. நாம் இந்த பணிக்குழுவை காலவரையின்றி விட்டு விடப்போகிறோம். நாம் அதை வருங்காலத்தில் பார்ப்போம். ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் அது முடிவுக்கு வந்துதான் தீரும். விஷயங்கள் முடிவுக்கு வருகின்றன. ஆனால் நாங்கள் அந்த பணிக்குழுவில் இன்னும் சிலரை சேர்ப்போம்.
இதை விரைவில் கலைத்து விடலாம் என்றுதான் முதலில் கருதினோம். ஆனால் அதை கலைப்பது பற்றி பேசுகிறவரையிலும் அது பிரபலமாகத்தான் இருந்து வருகிறது.
எங்கெங்கு சாத்தியப்படுகிறதோ அங்கெல்லாம் பள்ளிக்கூடங்கள் திறப்பதை பார்க்க விரும்புகிறேன்.
கொரோனா வைரசுக்கு எதிரான போரில் நர்சுகள் மிகப்பெரிய தியாகங்களை செய்திருக்கிறார்கள்.
இவ்வாறு டிரம்ப் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply