சமூக இடைவெளியை பின்பற்றி விமானங்களில் நடு இருக்கையை காலியாக விட்டால் பெரும் நஷ்டம் ஏற்படும்
கொரோனா வைரஸ் தாக்கி வருவதை தொடர்ந்து பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ரெயில், பஸ், விமான சேவை என அனைத்து பொதுப் பயன்பாட்டு வாகன போக்குவரத்தும் முற்றிலும் முடங்கியுள்ளது.
இந்நிலையில் கொரோனா வேகம் தணிந்துள்ள பல நாடுகள் விமானப் போக்குவரத்தை இன்னும் ஓரிரு வாரங்களில் முழுமையாக தொடங்குவதற்கான நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.
ஆனால் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, விமான பயணத்தின்போது இரு பக்கங்களிலும் உள்ள நடு இருக்கைகளை காலியாக விட்டு சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டுமென உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தி வருகிறது. இதை உலக சமூக ஆர்வலர்களும் வற்புறுத்தி வருகின்றனர்.
இதற்கு, சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரை தலைமையிடமாக கொண்டுள்ள சர்வதேச ஆகாய போக்குவரத்து சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுபற்றி இதன் தலைவர் அலெக்சாண்டர் டி ஜூனைக் கூறியதாவது:-
விமானத்தில் நோய்த் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு. இந்த நிலையில் சமூக இடைவெளியை விமானங்களில் பின்பற்றவேண்டும் என்று வலியுறுத்துவது விமான சேவையை நடத்தும் நிறுவனங்களுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும்.
விமானங்கள் ஒவ்வொன்றுமே ஆஸ்பத்திரி மாதிரியான வடிவமைப்பைக் கொண்டவைதான். எனவே இங்கு சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை.
தற்போதே, பயணிகளுக்கு உடல் வெப்ப சோதனை நடத்தப்பட்டும் மற்றும் பல அடுக்குகள் கொண்ட உயர்தர முக கவசங்கள் அணிந்து வருவதை உறுதிப்படுத்திய பிறகும்தான் விமானத்திற்குள் ஏற அவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். இனி இதை விமான ஊழியர்களுக்கும் கட்டாயப்படுத்தலாம்.
மேலும் விமான பயணிகளின் இருக்கைகள் வரிசை ஒன்றன்பின் ஒன்றாகத்தான் அமைக்கப்பட்டு உள்ளது.
விமான பயணிகளின் இருக்கையின் பின்பக்கம் தடுப்பு சுவர் போல்தான் அமைந்துள்ளது. எனவே பின்புறத்தில் இருப்பவர்களால் முன்னே இருப்பவர்களுக்கு நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்பில்லை. அவர்கள் பின்பக்கம் திரும்பி பேசுவதும் அரிது.
தவிர விமானத்தின் உள்ளே இருக்கும் காற்று மேலிருந்து கீழ் நோக்கித்தான் செல்லும். இதனால் தொற்று பரவாது.
ஏற்கனவே,கொரோனா ஊரடங்கால் உலக நாடுகளில் விமான சேவை நிறுவனங்கள் முடங்கி பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன.
இந்த நிலையில் நடு இருக்கையை காலியாக விட்டால் ஒவ்வொரு விமான பயணிக்கும் 43 முதல் 54 சதவீதம் வரை கட்டணத்தை அதிகரிக்க வேண்டியிருக்கும்.
அப்படி கட்டணத்தை உயர்த்தினால் விமான சேவை அடியோடு முடங்கும்.
எனவே இது சாத்தியமில்லாத ஒன்று.
இவ்வாறு அவர் கூறினார்.
பஸ், ரெயில்களுக்கும் சிக்கல்
நம் நாட்டில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு பஸ், ரெயில்கள் ஓடும்போதும் இதே சிக்கல் உருவாகக் கூடும்.
எனவே மத்திய, மாநில அரசுகள் இப்போதே இதற்கு ஒரு தீர்வு காண தயார் நிலையில் இருப்பது நல்லது!
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply