எச்சந்தர்ப்பத்திலும் தனது மகனுக்காக விசேட உதவி ஜனாதிபதியிடம் கோரவில்லை : மஹிந்த தேசப்பிரிய
நெதர்லாந்திலிருந்து தனது மகனான விதுர காசியப்ப தேசப்ரியவை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஒத்துழைப்பை கோரியிருந்ததாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை தாம் நிராகரிப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் நேற்று முன்தினம் கருத்து தெரிவித்துள்ள அவர், அரச புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் 18 மாதங்கள் பட்டப்பின் படிப்புக்காக சென்றிருந்த தனது மகன் அவரது கற்கைக்கான காலம் நிறைவடைந்ததையடுத்து விமான சேவைகள் தடை செய்யப்பட்டிருந்த நிலையில் நாட்டுக்கு வர முடியாதிருந்து இரண்டு தினங்களுக்கு முன் அவர் நாட்டை வந்தடைந்தார்.
எனினும் ஜனாதிபதியின் தலையீட்டால் பெற்றுக் கொடுக்கப்பட்ட விசேட விமானத்தில் அவர் நாடு திரும்பவில்லை என்பதை தமது முகநூல் ஊடாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் பதிவு செய்துள்ளார்.
இலங்கை அரசாங்கத்தினால் இங்கிலாந்து, பிரிட்டன்,வட அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலிருந்து அரச அதிகாரிகளையும் மாணவர்களையும் அழைத்து வருவதற்கு மேற்கொண்ட நடவடிக்கைகளில் தமது மகனும் நாடு திரும்பியதாகவும் அவருடன் கல்விகற்ற மேலும் மூன்று மாணவர்களும் அவருடன் இந்த பயணத்தின் போது நாடு திரும்பியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை தமது கல்வி நடவடிக்கைகள் நிறைவுற்ற நிலையில் தாய்நாட்டுக்கு திரும்புவதற்காக அவர் நெதர்லாந்து தூதரகத்திலும் இங்கிலாந்து உயர் ஸ்தானிகராலயத்திலும் இலங்கை வெளிவிவகார அமைச்சிலும் தம்மை பதிவு செய்துள்ளதையும் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயத்தில் தாம் தலையிட்டு அவரை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான வசதியைப் பெற்றுத் தருமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ள கடிதத்தின் பிரதிகளை பிரதமரின் செயலாளர் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் வெளிநாட்டிலுள்ள இளைஞர்களை மீள நாட்டுக்கு அழைத்து வருவதற்கு செயற்பட்ட குழுவுக்கு பொறுப்பான ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் மற்றும் அதிகாரிகளுக்கு அனுப்பியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் அவரை நாட்டுக்கு அழைத்து வருவதில் அசௌகரியங்கள் உள்ளதா? என அக்கடிதத்தில் கேட்கப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதற்கிணங்க தமது மகனை நாட்டுக்கு அழைத்து வருவதற்காக எச்சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதியுடன் தாம் பேச்சுவார்த்தை நடத்தவில்லையென்றும் அது தொடர்பில் தகவல்கள் பரவுவதாக கடந்த 05 ஆம் திகதி தாம் ஜனாதிபதிக்கு அறிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்தவேளையில் தாம் தமது மகனை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு தம்மிடம் வேண்டுகோள் விடுக்கவில்லை என்பதையும் அது தொடர்பில் தாம் எவருக்கும் அறிவிக்கவில்லை என்றும் ஜனாதிபதி தம்மிடம் தெரிவித்ததாகவும் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.
தான் எந்த சந்தர்ப்பத்திலும் தனது மகனுக்காக விசேட உதவி கோரவில்லை என்றும் அவர் ஏனைய அரச அதிகாரிகளைப் போன்றே நாட்டுக்கு அழைத்து வரப்படுவதற்கான உரிமையுடையவர் என்பதையும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தமது முகநூல் பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply