ஏ-9 பாதையூடாக தனியார் லொறிகளுக்கு அனுமதி

யாழ். குடாநாட்டுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களுடன் முதற்கட்டமாக தனியார் வர்த்தகர்களின் பொருட்களுடன் சுமார் 120 லொறிகள் ஏ-9 பாதையூடாக செல்லவுள்ளன. எதிர்வரும் 18ஆம் திகதி கொழும்பிலிருந்து மேற்படி லொறிகள் ஏ-9 பாதையூடாக செல்கின்றன என அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. வடக்கில் குறிப்பாக ஓமந்தைக்கு அப்பால் மோதல்கள் ஓய்ந்ததன் பின்னர் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளரினால் அனுப்பப்படும் அத்தியாவசிய பொருட்களுடன் ஏற்கனவே லொறிகள் சென்றன.

இதனையடுத்து குடாநாட்டிலுள்ள தனியார் வர்த்தகர்களின் கடைகளுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் அவர்களது லொறிகளிலேயே ஏற்றி செல்வதற்கு ஏதுவாக லொறிகளை பதிவு செய்யுமாறு அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் கேட்டிருந்தார்.

இந்த அறிவித்தலையடுத்து இதுவரை சுமார் 300 லொறிகள் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் திணைக்களத்தில் பதிவு செய்துகொண்டுள்ளன. பதிவு செய்யப்பட்ட இந்த லொறிகளில் சுமார் 120 லொறிகளே முதற்கட்டமாக செல்லவுள்ளன.

காலை ஆறு மணி முதல் மாலை 6.00 மணி வரை மட்டுமே ஏ-9 வீதியூடாக செல்ல லொறிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதுடன் எக்காரணம் கொண்டும் லொறிகளை வீதியின் ஓரத்தில் நிறுத்தக்கூடாது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வீதி ஓரங்கள் கண்ணிவெடி, மிதிவெடி அச்சுறுத்தல் உள்ளது என்பதாலேயே இவ்வாறான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குடாநாட்டை நோக்கியோ அங்கிருந்து கொழும்பு நோக்கியோ வரும் போது போகும் போது தற்செயலாக லொறி பழுதடைந்தால் லொறிச் சாரதிகள், நடத்துனர்கள் லொறி நிறுத்தப்பட்டுள்ள இடத்தைவிட்டு செல்லவேண்டாம் எனவும், வீதியின் ஓரங்களுக்கு செல்லவேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். தனியார் வர்த்தகர்களினால் லொறிகளுக்கு ஏற்றப்படும் பொருட்கள் ஒரே இடத்தில் வைத்து ஏற்றப்பட்டு சீல் வைக்கப்படும். குடாநாட்டில் கைதடி களஞ்சியசாலையில் வைத்தே பொருட்கள் கொண்டு செல்லப்பட்டு சோதனையின் பின்னர் தனியார் வர்த்தகர்களின் கடைகளுக்கு கொண்டு செல்லப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

அத்தியாவசிய உணவுப் பொருட்கள், உடைகள், கட்டடப் பொருட்கள், பாத்திரங்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் குடாநாட்டிற்குள் சென்றடைந்ததும் சகல பொருட்களின் விலைகளும் வெகுவாக குறைந்துவிடும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply