பயங்கரவாதிகளின் பாதுகாப்பான புகலிடமாக திகழும் பாகிஸ்தான்: அமெரிக்க அரசு குற்றச்சாட்டு
2019-ம் ஆண்டின் பயங்கரவாதம் தொடர்பான அறிக்கை ஒன்றை அமெரிக்க அரசின் வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பாகிஸ்தான், பயங்கரவாத இயக்கங்களின் பாதுகாப்பான புகலிடமாக தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்தியாவையும், ஆப்கானிஸ்தானையும் குறிவைக்கும் பயங்கரவாத இயக்கங்களை தனது மண்ணில் தொடர்ந்து செயல்பட பாகிஸ்தான் அனுமதித்து வருகிறது.
இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத இயக்கங்களாக லஸ்கர் இ தொய்பா, ஜெய்ஸ் இ முகமது ஆகியவையும், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான பயங்கரவாத இயக்கங்களாக ஆப்கன் தலீபான், ஹக்கானி குழு ஆகியவையும் இயங்குகின்றன.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் புல்வாமா தாக்குதலை தொடர்ந்து, இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத இயக்கங்களை கட்டுப்படுத்தவும், நிதிஉதவி கிடைப்பதை தடுக்கவும் பாகிஸ்தான் சில நடவடிக்கைகளை எடுத்தது. ஆனாலும், இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகள் மீது பாகிஸ்தான் இன்னும் உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை.
கடந்த ஆண்டு, அமெரிக்கா-தலீபான்கள் இடையிலான பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் அரசு ஆக்கப்பூர்வமான பங்காற்றியது. இருப்பினும், அனைத்து பயங்கரவாத இயக்கங்களின் கட்டமைப்புகளை அழிப்பதாக கொடுத்த வாக்குறுதியை இன்னும் காப்பாற்றவில்லை.
மேலும், 2008-ம் ஆண்டு மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஜெய்ஸ் இ முகமது நிறுவனர் மசூத் அசார், சஜித் மிர் ஆகியோர் மீது வழக்குத் தொடர பாகிஸ்தான் அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அவர்கள் இருவரும் பாகிஸ்தானில்தான் வசித்து வருவதாக கருதப்படுகிறது.
பாகிஸ்தானும் கூட பயங்கரவாத அச்சுறுத்தலை சந்தித்து வருகிறது. ஆனால், 2018-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2019-ம் ஆண்டில் அச்சுறுத்தல் குறைவுதான்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply