நலன்புரி முகாம்களில் உள்ள 3 லட்சம் மக்களின் நலன்கள் குறித்து அரசு போதிய கவனம் எடுக்கவில்லை: சுனிலா அபயசேகர
யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்தவர்களுக்கான நலன்புரி முகாம்களில் உள்ள 3 லட்சம் மக்களின் நலன்கள் குறித்து அரசு போதிய கவனம் எடுக்கவில்லையெனவும், நலன்புரி முகாம்களில் காணாமல் போகும் இளைஞர்களின் எண்ணிக்கை அச்சம் தரும் அளவுக்கு அதிகரித்துள்ளது எனவும் “இன்போர்ம்” (INFORmation Monitor) அமைப்பின் பணிப்பாளர் சுனிலா அபயசேகர தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நிகழ்ந்த மனித உரிமை மீறல் விவரங்களை ஆவணப்படுத்தும் “இன்போர்ம்” (INFORM) அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சுனிலா அபயசேகர கனடா – ரொறன்ரோவைத் தளமாகக் கொண்ட “றியல் நியூஸ் நெட்வேர்க்” (Real News Network) எனும் ஊடகத்துக்கு அளித்துள்ள பேட்டியிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.
முகாம்களில் உள்ள 3 லட்சம் மக்களின் நலன்கள் குறித்து அரசுபோதிய கவனம் எடுக்கவில்லையெனக் குற்றம் சாட்டியுள்ள அவர், முகாம்களில் உள்ளவர்களை உரிய விதத்தில் பதிவு செய்யும் நடைமுறை இல்லாததால் சில குழுக்களால் இலகுவாக இவர்களைக் கொண்டு செல்ல முடிகின்றது எனக் குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த வாரம் வவுனியா மெனிக்பார்ம் முகாமிலிருந்து 17 வயதிற்கு உட்பட்ட 200 இளைஞர்கள் கூட்டிச் செல்லப்பட்டனர் எனத் தெரிவித்துள்ள அவர் அரசு, இவர்கள் குறித்த விவரங்களை வெளியிடவில்லை. இவர்களது பெற்றோர்கள் மிகவும் அச்சத்துடன் காணப்படுகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply