கொரோனாவால் ஏற்படும் மனநல பாதிப்பு, தற்கொலை முயற்சிகளை தடுக்க வேண்டும்

கொரோனாவால் ஏற்படும் மனநல பாதிப்பு, தற்கொலை முயற்சிகளை தடுக்க வேண்டும்

ஓசையின்றி மூன்றாம் உலகப்போர் மூண்டிருக்கிறது. அதுதான் கண்ணுக்குத் தெரியாத எதிரியான கொரோனா வைரசை எதிர்த்து ஒட்டுமொத்த உலகமும் தொடுத்து இருக்கும் போர்.

இப்படி சொல்வதில் தவறே இல்லை. நாடுகளுக்கு இடையே நடக்கிற போர்கள் கூட குறிப்பிட்ட நாளில் முடிவை தந்து விடும். ஆனால் இந்த வைரசுக்கு எதிரான போரில் முடிவு எப்போது வரும் என்று தெரியாமல்தான் வல்லரசு நாடுகளே கைகளை பிசைந்து கொண்டு நிற்கின்றன. காரணம், இந்த வைரஸ் தொற்றால் ஏற்படுகிற பாதிப்புகள், நாளுக்கு நாள் நீண்டு கொண்டே போகின்றன.

அமெரிக்கா, பிரேசில், ரஷியா, இந்தியா, இங்கிலாந்து என கொரோனா வைரசின் மோசமான வெறியாட்டத்துக்கு ஆட்பட்ட நாடுகள், ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான உயிர்களை இழந்து வருகின்றன. இந்த உயிரிழப்புகள் ஒருபுறம் தீராத சோகத்தை ஏற்படுத்தி வருகின்றன.

இன்னொரு புறம் ஏற்படுகிற பாதிப்பு, கொரோனாவிட கொடியதாக இருக்கிறது. அதுதான் வேலை இழப்பும், வாழ்வாதார இழப்பும். உயிழப்புகளும், கொரோனாவால் ஏற்படும் சங்கிலித்தொடர் பாதிப்பும், வேலை இழப்பும், வாழ்வாதார இழப்பும் மனித மனங்களை சிதைத்து பாடாய்படுத்தி வருகின்றன. தங்களின் மன காயங்களுக்கு தடவுவதற்கு ஒரு மருந்தும் இல்லை என்றே பாதிக்கப்படுகிறவர்கள் கருதுகிறார்கள். இதனால்தான் பலரும் ஆழ்ந்த கவலையில் தங்களை ஆட்படுத்திக்கொள்கிறார்கள். ஒரு சிலர் தற்கொலை என்ற விபரீத முடிவுக்கு சென்றுவிடுவதையும் பார்க்க முடிகிறது.

கொரோனா வைரஸ் இப்படிப்பட்ட நிலைக்கு மனித குலத்தை தள்ளி இருப்பது உலக சுகாதார நிறுவனத்தையும் கவலைப்பட வைத்திருக்கிறது.

அதனால்தான் கொரோனா வைரஸ் தொற்று அதிவேகமாக பரவுவது வாழ்வையும், வாழ்வாதாரத்தையும் பாதித்து மக்களிடையே பயத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில் மக்களின் மனநலத்திலும், தற்கொலை தடுப்பிலும் தென்கிழக்கு ஆசிய பிராந்திய நாடுகள் கவனம் செலுத்த வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் வேண்டுகோள் விடுத்து உள்ளது.

இதுபற்றி அந்த நிறுவனத்தின் தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தின் இயக்குனர் டாக்டர் பூனம் கேத்ரபால் சிங் கூறிய கருத்துக்கள் இவை:-

கொரோனா வைரஸ் நோய் தொற்றானது தனிமையையும், மனச்சோர்வையும் ஏற்படுத்தக்கூடும்.

மக்களின் மன நலத்தை பாதிக்கும் மற்றொரு காரணியாக வீட்டு வன்முறையும் இருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்றைத்தடுக்க உலகளவில் போடப்பட்டுள்ள ஊரடங்குகள், இத்தகைய வீட்டு வன்முறைகளை அதிகரித்து உள்ளன.

ஒரு பக்கம் வாழ்க்கையில் பாதிப்பு. இன்னொரு புறம் வாழ்வாதாரம் பாதிப்பு. இப்படிப்பட்ட பாதிப்புகளால், மக்களிடையே பயம், பதற்றம், மனச்சோர்வு, மன அழுத்தம் ஏற்பட்டு வருகிறது.

யாருடனும் சேர்ந்திருக்காமல் தனிமனித இடைவெளியை பின்பற்றுவதும், தனிமைப்படுத்தப்படுவதும், கொரோனா வைரஸ் நிலைமைகளை சமாளிப்பதும் மனநல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இது அவசர கவனம் செலுத்த வேண்டியதாகும்.

மன நலத்தில் பாதிப்பா? விரைவாக அதை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். தற்கொலையை தடுக்க பொருத்தமான மேலாண்மை முக்கியம்.

ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் 8 லட்சம் பேர் தற்கொலை செய்து உயிர் துறக்கிறார்கள். 15 முதல் 29 வயதினர் இடையேயான மரணத்தில் தற்கொலைதான் முக்கிய காரணமாகிறது.

தற்கொலை செய்து கொண்டு ஒவ்வொரு இளைஞரும் இறக்கிறபோது, அதே போன்று 20 பேர் தற்கொலைக்கு முயற்சிப்பது சான்றுகளில் இருந்து தெரியவந்துள்ளது. உலகளாவிய தற்கொலை மரணங்களில் தென்கிழக்கு ஆசிய பிராந்தியம், 39 சதவீதம் பங்களிப்பு செய்கிறது.

தற்கொலை தடுக்கத்தக்கதாக இருந்தாலும், அது மிகத்தீவிரமான பொது சுகாதார பிரச்சினை ஆகும். தற்கொலைக்கு முயற்சித்து உயிர்பிழைப்போரும், அவர்களது குடும்பத்தினரும் பல வடிவத்தில் களங்கத்தையும், பாகுபாட்டையும் சமூகத்தில் சந்திக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.

கொரோனா வைரஸ் தொற்று பரவி வருகிற இந்த கடினமான தருணத்தில், ஒரு விரிவான, ஒருங்கிணைந்த, பதில் அளிக்கக்கூடிய மன நலம் மற்றும் சமூக பாதுகாப்பு சேவைகளை வழங்குவதில் நாம் பாடுபட வேண்டும்.

இப்படி சொல்கிறார் பூனம் கேத்ரபால் சிங்.

உண்மைதான். கவலை எந்த பிரச்சினைக்கும் தீர்வு ஆகாது. மனதை குப்பை தொட்டிபோல கவலைகளால் நிரப்பாமல், பூக்கூடைபோல நம்பிக்கை மலர்களை இட்டு நிரப்பினால், மன நலம் காக்கலாம். தற்கொலை சிந்தனை வராது. கொரோனா வைரசையும் எதிர்கொண்டு வீழ்த்தலாம்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply