வவுனியாவின் சகல பகுதிகளுக்கும் 180 நாட்களில் மின்சாரம்: பசில் ராஜபக்ஷ

‘வடக்கின் வசந்தம்’ திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி, உட்கட்டமைப்பு, மீள்குடியேற்ற நடவடிக்கைகள் தொடர்பாக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ தலைமையில் விசேட கூட்டமொன்று வவுனியாவில் நேற்று நடைபெற்றது.180 நாட்கள் திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்டத்திலுள்ள அபிவிருத்தி உட்கட்டமைப்பு பணிகள் எவ்வாறு முன்னெடுக்கப்படல் வேண்டும் என்பது பற்றி பசில் ராஜபக்ஷ எம்.பி. விளக்கமளித்தார்.

வட மாகாண அபிவிருத்தி, உட்கட்டமைப்பு, மீள்குடியேற்றம் என்பவற்றுக்கான விசேட ஜனாதிபதி செயலணியின் முதலாவது மாவட்ட கூட்டமே நேற்று வவுனியாவில் நடைபெற்றது. வவுனியா மாவட்டத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 180 நாட்களுக்குள் மின்சார வசதிகள் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற திட்டம் உட்பட பல முக்கிய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

கல்வி, சுகாதாரம், நீர்ப்பாசனம், குடிநீர் விநியோகம், விவசாயம், வீதி அபிவிருத்தி, பொது வசதிகள், மின்சாரம், போக்குவரத்து துறைகளில் 180 நாட்களுக்குள் முன்னெடுக்கப்பட வேண்டிய வேலைகள் தொடர்பாகவும் இங்கு ஆராயப்பட்டது. வட மாகாண ஜனாதிபதியின் விசேட செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்திற்கு வன்னி மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி. சிவநாதன் கிஷோரும் கலந்துகொண்டதுடன் வட மாகாண அபிவிருத்தி தொடர்பாக ஜனாதிபதி முன்னெடுக்கும் நல்ல திட்டங்களுக்கு பூரண ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்குவதாகவும் தெரிவித்தார்.

ஏனைய தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பிக்களுக்கு தான் அழைப்பு விடுக்கவோ, ஆலோசனைகள் வழங்கவோ போவதில்லை என்றும் அவர்களும் என்னைப்போன்றே பாராளுமன்ற உறுப்பினர்கள்தான். இந்த தருணத்தில் என்ன செய்யவேண்டும் என்று அவர்களுக்கும் தெரியும் என்றும் சிவநாதன் கிஷோர் எம்.பி. ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

கூட்டத்தில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், வவுனியா அரச அதிபர் திருமதி சார்ள்ஸ், வடமாகாண ஆளுநர் டிக்ஷன்தால, நிவாரணக் கிராமங்களுக்குப் பொறுப்பான இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் ஜகத் சந்திரசிறி ஆகியோரும் கலந்துகொண்டனர். இக்கூட்டம் முடிவடைந்ததும் வவுனியா நகரில் புதிதாக கட்டப்பட்ட இளைஞர் சேவை மன்றத்தின் புதிய கட்டத்தையும் பசில் ராஜபக்ஷ திறந்து வைத்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply