‘நாம் அரசனா? அல்லது ஏழையா? என வைரசுக்கு தெரியாது, விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்’ – ‘டபிள்யூ.எச்.ஓ’ டூ பிரேசில் அதிபர்

பிரேசில் நாட்டு அதிபராக இருப்பவர் ஜெயிர் போல்சனரோ. கொரோனா வைரசால் உலகமே அச்சத்தில் இருக்கும் போது மக்கள் சமூக விலகல், முகக்கவசம் அணியத் தேவையில்லை சுதந்திரமாக நடமாடுங்கள் என்று பிரசாரம் செய்தவர். மேலும், கொரோனா வைரசை ’இது ஒரு சிறிய காய்ச்சல்’ தான் என கூறி பரபரப்பை ஏற்படுயவராவார். 

பிரேசிலில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையிலும் மக்கள் லாக்டவுனில் வீட்டுக்குள் முடங்கி இருந்தால், கொரோனா ஏற்படுத்தும் பாதிப்பைவிட மோசமான பாதிப்பு பொருளாதார முடக்கத்தால் ஏற்படும். மக்கள் வெளியே வந்து சுதந்திரமாக பொருளாதார நடவடிக்கையில் ஈடுபடுங்கள் என தொடர்ந்து போல்சனரோ பேசி வந்தார். 

மேலும், அவர் மக்களை சந்திக்கும் போதும், கூட்டங்களில் பங்கேற்கும் போதும் என அனைத்து தருணங்களிலும் முகக்கவம் அணியாமல் அலட்சியமாக செயல்பட்டு வந்தார். அதிபரின் செயலுக்கு அந்நாட்டு நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்ததால் தற்போது முகக்கவசம் அணிகிறார்.

இதற்கிடையில், அதிபர் போல்சனரோவுக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. லேசான அறிகுறிகளுடன் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தன்னை வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். 

மேலும், கூட்டங்களில் பங்கேற்கப்போவதில்லை எனவும், அலுவலக பணிகளை வீடியோ காண்பிரன்ஸ் மூலமாக மேற்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதிபர் போல்சோனாரோ மட்டுமல்லாமல் அவரது மனைவி மைக்கில் போல்சனரோவுக்கும் கொரோனா வைரஸ் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் வீட்டில் தங்களை தாங்களாகவே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள பிரேசில் அதிபர் போல்சனரோ வைரஸ் பாதிப்பில் இருந்து விரைவில் குணமடைய உலக சுகாதார அமைப்பு வாழ்த்து தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் ஆதனாம் கூறுகையில், ’வைரஸ் பாதிப்பில் இருந்து விரைவில் குணமடைந்து உடனடியாக அலுவலக பணிகளுக்கு திரும்பி அதிபர் போல்சனரோ மக்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்’ என்றார்.

அதேபோல் உலக சுகாதார அமைப்பின் மூத்த அதிகாரியான மைக்கில் ரயான் கூறுகையில்,’பிரேசில் அதிபர் கொரோனாவில் இருந்து விரைவில் குணமடைய வாழ்த்துகிறோம். உலகின் பல்வேறு நாட்டு தலைவர்களும் இந்த அனுபவத்தை சந்தித்துள்ளனர். 

இந்த சம்பவம் வைரஸ் குறித்த உண்மைத்தன்மையை மக்களுக்கு எடுத்துரைத்துள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு நாம் அனைவரும் இலக்குகள் தான். வைரசுக்கு நாம் அரசனா? அல்லது பாமர ஏழையா? என்று தெரியாது. இது கூட்டு பாதிப்பை எடுத்துக்காட்டுகிறது’ என்றார். 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply