கிழக்கு மாகாணத்தில் சாதாரண வாழ்க்கை நிலை தோன்றியுள்ளது
காணாமல் போதல்கள் சம்பவங்கள் குறைந்து, வீதித்தடைகள் பல நீக்கப்பட்டு கிழக்கு மாகாணத்தில் சாதாரண வாழ்க்கை நிலை தோன்றியிருப்பதாக தனிநபர் ஆணைக்குழு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. காணாமல் போதல்கள், கடத்தல்கள், படுகொலைகள் தொடர்பாக விசாரிப்பதற்கு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட முன்னாள் நீதிபதி மஹாநாம திலகரட்ண தலைமையிலான ஆணைக்குழுவே இந்த அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது.
2008ஆம் ஆண்டு ஜவனரி முதல் மே வரையான காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது இந்த வருடம் அங்கு மனித உரிமை மீறல்கள் 90 வீதம் முதல் 95 வீதம் வரை குறைவடைந்திருப்பதாக அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“ஆயுதக் குழுக்கள் தமது ஆயுதங்களைக் கையளித்து ஜனநாயகப் பாதைக்குத் திரும்பியமையாலேயே இந்த நிலை தோன்றியுள்ளது. எல்லா விடயங்களிலும் சட்டம் செயற்படுகின்றது என்ற பொதுக் கருத்தும் நிலவுகிறது” என முன்னாள் நீதிபதி திலகரட்ண கூறினார்.
திருகோணமலையில் இரண்டு வீதித் தடைகளைவிட ஏனைய வீதித் தடைகள் நீக்கப்பட்டுள்ளபோதும், மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்னமும் வீதித் தடைகள் முற்றாக நீக்கப்படவில்லையென அவர் குறிப்பிட்டார்.
கடந்த வருடம் மே மாதம் கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து நிலைமை சீரடைந்ததாகச் சுட்டிக்காட்டும் ஆணைக்குழுவின் தலைவர், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் களைந்தமையும் இந்த சுமூக நிலைக்குக் காரணம் எனக் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply