இந்தியாவின் ஹொங்கொங்காக இலங்கை அனுகூலத்தை பெறும்

மூன்று தசாப்தகால உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், சீனாவிடமிருந்து ஹொங்கொங் வர்த்தக ரீதியில் அனுகூலத்தை பெற்றுக்கொள்வதைப் போன்று இந்தியாவுக்கு சமீபமாக இருக்கும் இலங்கையும் அனுகூலத்தை பெற்றுக்கொள்ள கூடியதால் “இந்தியாவின் ஹொங்கொங்’காக இலங்கை உருவாகக்கூடும் என்று தனியார் வங்கியான எச்.எஸ்.பி.சி. தெரிவித்துள்ளது.

இலங்கையின் 32 பில்லியன் டொலர் பொருளாதாரத்தை தசாப்தகால யுத்தம் பாதிப்படையச் செய்திருந்தது. இந்த வருட முதல் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 1.5 சதவீதமென தொகை மதிப்பீட்டு புள்ளிவிபரவியல் திணைக்களம் நேற்று முன்தினம் புதன் கிழமை வெளியிட்டிருந்த அறிக்கையில் தெரிவித்தது. சர்வதேச பொருளாதார பின்னடைவும் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் தாமதத்தை ஏற்படுத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில், துறைமுகங்கள், விற்பனை, ஆடைத்தொழில்துறை, தேயிலை ஏற்றுமதித்துறை என்பன புத்துயிர்ப்பு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“பொருளாதாரத்தில் மேலெழுந்து வரும் நிலைமை எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையின் கேந்திர அமைவிடமானது இயற்கையாகவே அனுகூலத்தை தருவதாக உள்ளது’ என்று எச்.எஸ்.பி.சி. வங்கியின் ஆசியாவுக்கான பிரதம முதலீட்டு உபாயம் வகுக்கும் அதிகாரியான அர்ஜுனா மகேந்திரன் தெரிவித்திருக்கிறார்.

சீனாவிடமிருந்து ஹொங்கொங் வர்த்தக ரீதியில் அனுகூலத்தை பெற்றுக்கொள்வதைப் போன்று இந்தியாவுக்கு சமீபமாக இருக்கும் இலங்கையும் அனுகூலத்தை பெற்றுக்கொள்ள முடியும் என்று அவர் கூறியுள்ளார். உலகில் துரிதமாக வளர்ச்சியடைந்து வரும் பாரிய பொருளாதாரமாக இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. இலங்கை இந்தியாவுக்கு 19 மைல் தூரத்திலேயே உள்ளது.

இந்தியா இறக்குமதி செய்யும் பொருட்களை கப்பல்களில் மாற்றி ஏற்றும் நடவடிக்கைகள் கொழும்புத் துறைமுகத்தில் இடம்பெறுகின்றன. இது கொழும்புத் துறைமுகத்தில் இடம்பெறும் பணிகளில் 70 சதவீதமாகும். இதனை மேலும் அதிகரிக்க முடியும். ஏனெனில், இந்தியத் துறைமுகங்கள் போதியளவுக்கு ஆழமானவை அல்ல என்று மகேந்திரன் கூறியுள்ளார்.

“ஒருபோதும் எதிர்பார்க்காதது நடந்துள்ளது. நீங்கள் உங்களின் வாழ்வின் அநேகமான காலத்தை யுத்த சூழ்நிலையிலேயே கழித்துள்ளீர்கள். இது நம்பமுடியாதது. இப்போது விடயங்களை வேறுபட்டதாக நான் பார்க்கிறேன். வளர்ச்சிக்கான அதிகளவு தன்மை காணப்படுகிறது’ என்று ஓடல் நிறுவனத்தை நிர்வகிக்கும் ஒடாரா குணவர்த்தனா கூறியுள்ளார்.

2012 இல் 4 பில்லியன் டொலர் நேரடி வெளிநாட்டு முதலீடுகளை முதலீட்டு சபை எதிர்பார்க்கிறது. துறைமுகங்கள், தொலைத்தொடர்பு, உல்லாசப் பயணம் போன்ற துறைகளில் நேரடி வெளிநாட்டு முதலீடுகள் எதிர்பார்க்கப்படுகிறது.

“வெளிநாட்டு முதலீட்டாளர்களிடமிருந்து உற்சாகமளிக்கும் பதிலை நாம் பெற்றுவருகிறோம். மூன்று மாதத்தில் மூன்று முன்னணி தோட்டங்கள் முதலீட்டு உடன்படிக்கையில் கைச்சாத்திடுமென எதிர்பார்க்கிறோம்’ என்று முதலீட்டு சபையின் தலைவர் தம்மிக பெரேரா கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply