அமரர் தொண்டமானின் சாணக்கியத்தால் மலையகத்தில் கல்வி வளர்ச்சி

மலையகத்தில் அன்று பட்டி தொட்டியாக இருந்த பாடசாலைகள், அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் சாணக்கியத்தால் அடுக்கு மாடிகளைக் கொண்ட பாடசாலையாக வளர்ச்சியடைந்துள்ளதென பிரதிக் கல்வியமைச்சர் எம்.சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமை பூனாகலை பெருந்தோட்டத்துக்கான நூலகத் திறப்பு விழா மற்றும் கோயில் மண்டபத்திற்கான அடிக்கல் நடும் வைபவத்திற்கு பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்;

மலையகத்தில் நீண்டகால அபிவிருத்திக்கு வித்திட்ட புகழும், பெருமையும் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானையே சாரும். எனவே அவர் காட்டிய வழியில் சென்று மலையகத்தின் அபிவிருத்திக்கு உதவ வேண்டிய பொறுப்பு மலையக மக்களையே சாரும்.

ஆட்சியிலுள்ள அரசியலமைப்போடு இணைந்து இ.தொ.கா.செயற்படுவதால் மலையக மக்களுக்கான தேவைகளை படிப்படியாக நிறைவேற்றி வருகின்றது.

தோட்ட வீதிகள் பல இன்று கொங்கிறீட் வீதிகளாகவும் வைத்தியசாலைகள் அரச உடைமையாக்கப்பட்டு அபிவிருத்தியடைந்தும் பாடசாலை ஆசிரியர் நியமனம் வெறும் 50 பேருடன் தொடங்கி இன்று 1,727 பேருடன் நின்று விடாமல் மீண்டும் மலையகத்திலுள்ள தேசிய பாடசாலைகளுக்கு 665 இற்கும் அதிகமான ஆசிரியர் நியமனங்களைப் பெற்றுள்ளன.

சமுர்த்தி உத்தியோகத்தர்கள், தொடர்பாடல் உத்தியோகத்தர்கள் 501 பேர் தோட்டங்கள் தோறும் தபால் விநியோகத்திற்காக தபால் உத்தியோகத்தர்கள், கிராமசேவக உத்தியோகத்தர்கள் மாத்திரமல்லாது பொலிஸ் உத்தியோகத்தர்களும் புதிதாக நியமனம் பெற்றுள்ளனர்.

மலையகத்திற்குள்ள தேவைகளை அடையாளப்படுத்தி தீர்க்க வேண்டிய பொறுப்பு எமக்குண்டு. இவற்றினைக் கருத்தில் கொண்டு மலையகத்தின் தந்தை அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் கனவுகளை நனவாக மாற்றுவதற்கு நல்லதொரு சந்தர்ப்பம் எதிர்வரும் காலங்களில் கிடைக்கவுள்ளதெனவும் அவர் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply