வவுனியா முகாம்களில் கிழக்கு மாகாண மக்களின் விபரங்கள் சேகரிப்பு

வவுனியா பாடசாலைகளில் அமைந்துள்ள இடைத்தங்கல் முகாம்களிலும், செட்டிகுளம் மனிக்பாம் பிரதேச நிவாரண கிராமங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்த குடும்பங்களில் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த குடும்பங்கள் பற்றிய விபரங்களை பொலிஸார் தற்போது திரட்டி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தப் பணிக்காக அந்த மாவட்டங்களைச் சேர்ந்த விசேட பொலிஸார் வவுனியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. விபரங்கள் திரட்டப்பட்டதும், அந்தப் பகுதிகளில் உள்ள தமது சொந்த இடங்களுக்கு இவர்களை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என விபரங்களைத் திரட்டும் பொலிஸார் தம்மிடம் தெரிவித்ததாக முகாம்களிலுள்ள கிழக்கு மாகாண வாசிகள் தெரிவித்தனர்.

தொழிலுக்காகவும், திருமண பந்தம் காரணமாகவும், உறவு முறைகள் காரணமாகவும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பலர் வன்னிப்பிரதேசத்திற்குச் சென்று அங்கு வாழ்ந்து வந்தனர். விடுதலைப்புலிகள் அமுல்படுத்தியிருந்த பாஸ் நடைமுறை காரணமாக இவர்கள் அங்கிருந்து வெளியேறி தமது சொந்த இடங்களுக்குச் செல்ல முடியாமல், போர்ச்சூழலில் சிக்கிக் கொண்டனர். பின்னர் இவர்கள் இராணுவத்தினரிடம் சரணடைந்து, இடம்பெயர்ந்து வவுனியா இடைத்தங்கல் முகாம்களுக்கு வந்து அங்கு தங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply