இலங்கை அரசாங்கத்துக்கு வழங்கிவரும் இராணுவ உதவிகளை இந்தியா நிறுத்த வேண்டும்:பா.நடேசன்
இலங்கை இனப்பிரச்சினைக்கு இராணுவத் தீர்வு சாத்தியம் இல்லையெனத் தெரிவித்திருக்கும் விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், இராணுவத் தீர்வைத்தான் இலங்கை அரசாங்கம் தேர்ந்தெடுக்குமாயின் வெளிநாட்டு உதவியுடன் தமிழ் மக்கள் தமது அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொள்வார்கள் எனக் கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்படும் நிலையிலிருந்து வெகுதொலைவில் உள்ளனர் என இந்தியாவின் ‘த வீக்’ சஞ்சிகைக்கு வழங்கிய செவ்வியில் அவர் தெரிவித்தார்.
“இலங்கை அரசாங்கத்தின் கொடுமையான நடவடிக்கைகள் தமிழ்நாட்டில் மாத்திரமன்றி, வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களாலும் கண்டிக்கப்படுகின்றன. இனப்பிரச்சினையை இராணுவ ரீதியாக மாத்திரம் தீர்ப்பதற்கு முனைந்தால், அது வெளிநாடுகளின் உதவியுடன் தமிழர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் நிலையை ஏற்படுத்தும்” என விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் கூறினார்.
“மோதல்களில் வெற்றி பெற்றதாகக் கூறுவது அரசாங்கத்தினதும், இராணுவத்தினதும் வழமை. தொடர்ச்சியாக ஆட்சிக்கு வரும் அனைத்து அரசாங்கங்களும் விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்கப் போவதாகக் கூறிவருகின்றன. எனினும், அவமானமே அவர்களுக்கு எஞ்சுகிறது” என நடேசன் தனது செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.
வன்னியில் இடம்பெற்றுவரும் மோதல்களில் அரசாங்கப் படைகள் பாரிய இழப்புக்களைச் சந்திப்பதுடன், இராணுவத்தினர் பலர் முகாம்களைவிட்டுத் தப்பியோடுவதாகவும் த வீக் சஞ்சிகைக்கு வழங்கிய செவ்வியில் நடேசன் கூறினார்.
விமானப்படையினரின் குண்டுத் தாக்குதல்களால் வன்னியில் சிறுவர்கள், முதியவர்கள் உட்பட பலர் கொல்லப்பட்டு வருவதாகவும், மக்கள் எதிர்நோக்கியிருக்கும் கஷ்டகள் குறித்த செய்திகளைத் தாம் வெளியிட்டபோதும், அவை வெளிநாடுகளுக்குச் செல்லவிடாமல் அரசாங்கம் தடுத்துவிடுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், இலங்கை அரசாங்கத்துக்கு வழங்கிவரும் இராணுவ உதவிகளை இந்திய மத்திய அரசாங்கம் நிறுத்த வேண்டும் எனவும், தமது அமைப்பு மீதான தடையை நீக்கி போராட்டத்தை அங்கீகரிக்க வேண்டும் எனவும் விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் ‘த வீக்’ சஞ்சிகைக்கு வழங்கிய செவ்வியில் கோரிக்கை விடுத்துள்ளார்:
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply