சட்டவிரோத ஆயுதங்களை ஒப்படைக்க 2ம் திகதி வரை கால அவகாசம்

கிழக்கு மாகாணத்தில் சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருப்போர் அடுத்த மாதம் (ஓகஸ்ட்) இரண்டாம் திகதிக்கு முன்னர் தம்மிடமுள்ள ஆயுதங்களை படையினரிடம் ஒப்படைத்துவிட வேண்டுமென மட்டக்களப்பு மாவட்டத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் எடிசன் குணதிலக தெரிவித்தார். காத்தான்குடியில் உள்ள பொதுமக்களுக்கும், படை அதிகாரிகளுக்குமிடையில் நடைபெற்ற சந்திப்பில் உரையாற்றும் போதே பிரதிப் பொலிஸ் மா அதிபர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

காத்தான்குடிப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மஹிந்த வீரசூரிய தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், இந்த நாட்டில் முப்படையினரைத் தவிர வேறு யாரும் ஆயுதங்கள் வைத்திருக்க முடியாது. கிழக்கு மாகாணத்தில் சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருப்போர் அவ் ஆயுதங்களை உடனடியாக பொலிஸாரிடம் அல்லது இராணுவத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும்.

அடுத்த மாதம் (ஓகஸ்ட்) இரண்டாம் திகதிவரை சட்டவிரோத ஆயுதங்களை ஒப்படைக்கும் காலமாகும். இந்தக் காலப் பகுதிக்குள் சட்டவிரோதமான ஆயுதங்களை ஒப்படைக்கத் தவறும் பட்சத்தில் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அவ்வாறு ஆயுதங்கள் வைத்திருப்போர் கண்டுபிடிக்கப்பட்டால் நீதிமன்றத்தினூடாக நடவடிக்கை எடுக்கப்படும்.

நீதியையும், ஜனநாயகத்தையும் நிலைநாட்ட வேண்டிய பொறுப்பு அரசாங்கப் படையைச் சார்ந்தது. நாங்கள் யாரும் பக்கச்சார்பாக வேலை செய்வதில்லை.

நாங்கள் அணிந்திருக்கும் காக்கிச் சட்டை அனைவருக்கும் சமமான நீதியை வழங்கக்கூடியது.

உங்களைப் பாதுகாப்பதற்கும் சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்துவதற்கும் பொலிஸாரும், படையினருமுள்ளனர். இதைக் கருத்திற்கொண்டு அனைவரும் செயற்பட வேண்டும் என அவர் மேலும் இங்கு தெரிவித்தார்.

இச்சந்திப்பில் கிழக்குப் பிராந்திய இராணுவத் தளபதி சிறினாத் ராஜபக்ஷ, விசேட அதிரடிப்படையின் மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பதிகாரி ரணவன, 234 வது படைப்பிரிவின் மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பதிகாரி கேர்ணல் திலகரத்ன உட்பட பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply