தமிழ் இனவாதிகளை தோற்கடித்த அரசாங்கம் சிங்கள இனவாதிகள் எதிர்க்கின்றார்களென்ற காரணத்துக்காக தீர்வு யோசனையை பின்வைக்காது

இனவாதக் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தாலும் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கம் உறுதியாக இருக்கின்றது. தமிழ் இனவாதிகளை தோற்கடித்த அரசாங்கம் சிங்கள இனவாதிகள் எதிர்க்கின்றார்கள் என்ற காரணத்துக்காக தீர்வு யோசனையை பின்வைக்கப் போவதில்லை என்று நிர்மாண மற்றும் பொறியியல் துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார். அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளும் ஆதரவு வழங்குமா? என்று அமைச்சரிடம் வினவியபோதே மேற்கண்டவாறு கூறினார். அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது.

அரசியல் தீர்வை முன்வைக்கும் செயற்பாட்டில் அரசாங்கம் உறுதியாக இருக்கின்றது. அரசியலமைப்பில் தற்போது இடம்பெறுகின்ற 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் ஆராய்ந்துவருகிறது. காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை தொடர்பில் கலந்துரையாடுகின்றோம். குறைந்தளவிலான பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டுவருகின்றது. 13 ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஆராய்வதற்கு அமைச்சர்கள் மட்டத்தில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளமை உங்களுக்கு தெரியும். இதேவேளை மாகாண சபை முறைமையை முழுமையாக அமுல்படுத்த ஆதரவு வழங்குவோம் என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட அமைச்சர்கள் என்னிடம் தெரிவித்தனர். எனவே அனைத்து விடயங்களும் ஆரோக்கியமாகவே அமைந்துள்ளன.

இதேவேளை அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளும் ஆதரவு வழங்குமா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. ஆனால் மாகாண சபை முறைமையை அமுல்படுத்த அரசில் அங்கம் வகிக்கும் கட்சிகள் ஆதரவு வழங்கும் என்று எதிர்பார்க்கின்றோம். எப்படியாயினும் இனவாத கட்சிகளின் கோரிக்கையை ஏற்று அரசியல் தீர்வை முன்வைக்கும் செயற்பாட்டில் பின்வாங்கமாட்டோம். விடுதலை புலிகள் என்ற இனவாதிகளை தோற்கடித்துள்ளோம். இந்த நிலையில் சிங்கள இனவாதிகளுக்கு இடம்கொடுக்கமாட்டோம்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply