வணங்கா மண் கப்பலை தனது கடல் எல்லையிலிருந்து வெளியேறுமாறு இந்திய அரசாங்கம் உத்தரவு
வன்னித் தமிழர்களுக்காக ஐரோப்பிய நாடுகளில் வாழ்கின்ற தமிழர்கள் அனுப்பிவைத்த நிவாரணப் பொருட்களுடன் இலங்கைக்குச் சென்று, அங்கிருந்து திருப்பிவிடப்பட்டு, சென்னை அருகே தரித்து நின்றுகொண்டிருந்த வணங்கா மண் கப்பல், சந்தேகத்திற்குரியதாக இருப்பதாகவும், எனவே அக்கப்பலை இந்திய கடல் எல்லையை விட்டு நீங்கிச் செல்லுமாறும் இந்திய அரசாங்கம் இன்று உத்தரவிட்டது. இந்த உத்தரவைத் தொடர்ந்து, சென்னை அருகே நின்றுகொண்டிருந்த வணங்கா மண் கப்பல் அங்கிருந்து கிளம்பிச் சென்றது. ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் வன்னித் தமிழர்களுக்காக உணவு, மருந்து வகைகள், குடிநீர் உள்ளிட்டவற்றைச் சேகரித்து கப்டன் அலி என்ற சிரிய நாட்டுக் கப்பலில் அனுப்பிவைத்தனர். இந்தக் கப்பலுக்கு வணங்கா மண் என்று அவர்கள் பெயரிட்டிருந்தனர்.
ஆனால், இந்தக் கப்பலை வன்னிப் பகுதிக்குப் போகவிடாமல் இடைமறித்து கொழும்புக்குக் கொண்டுசென்றது இலங்கை கடற்படையினர் அதனைச் சோதனையிட்டனர். இதில் சந்தேகத்திற்கிடமான வகையில் எதுவும் இல்லை என்று தெரிவித்த இலங்கை அரசு, இருப்பினும் நிவாரணப் பொருட்களை இறக்காமல் அப்படியே திரும்பிப் போய்விடுமாறு உத்தரவிட்டது.
இதையடுத்து, சென்னை நோக்கிப் புறப்பட்ட வணங்கா மண் கப்பல், சென்னை துறைமுகத்திற்கு 18 கடல் மைல் தொலைவில் நங்கூரமிட்டு நிலைகொண்டிருந்தது. அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் அதன் ஊழியர்கள் குழப்பத்தில் இருந்தனர். வணங்கா மண் கப்பலில் உள்ள நிவாரணப் பொருட்களை இலங்கைத் தமிழர்களிடம் சேர்ப்பிக்க மத்திய அரசு உதவ வேண்டும் என முதல்வர் கருணாநிதி உள்ளிட்ட தமிழகத் தலைவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த நிலையில், கப்பலில் இருந்த ஊழியர்களில் சிலருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. தண்ணீர் கேட்டு அவர்கள் சென்னை துறைமுகத்திற்குத் தகவல் அனுப்பினர். இதையடுத்து, அவர்களுக்கு 200 லீற்றர் தண்ணீர் அனுப்பிவைக்கப்பட்டது.
இந்தச் சூழ்நிலையில், வணங்கா மண் கப்பலை இந்திய கடற்படை அதிகாரிகள் திடீரெனச் சோதனையிட்டனர். சோதனைக்குப் பின்னர் வணங்கா மண் கப்பல் சந்தேகத்திற்குரியதாக இருப்பதாகவும், எனவே, இந்தியக் கடல் எல்லையை விட்டு அது செல்லவேண்டுமெனவும் கப்பல் கப்டனிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து, வேறு வழியின்றி வணங்கா மண் கப்பல் இன்று சென்னை கடல் பகுதியிலிருந்து கிளம்பியுள்ளது. அநேகமாக அது மறுபடியும் ஐரோப்பாவுக்கே திரும்பிச் செல்லும் வாய்ப்பு இருப்பதாகக் கருதப்படுகிறது. வணங்கா மண் குறித்து சந்தேகம் தெரிவித்துள்ள இந்தியத் தரப்பில், எந்த வகையிலான சந்தேகம் அது என்பது குறித்து விரிவாகத் தெரிவிக்கப்படவில்லை.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply