வெள்ளவத்தை பகுதியில் இரு தமிழ் குழுக்களிடையில் மோதல்: இருவர் உயிரிழப்பு

வெள்ளவத்தைப் பகுதியில் இரு இளைஞர் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் இறுதியில் மோதலாக வெடித்ததால் இருவர் பலியானதுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற இந்த மோதல் சம்பவத்தில் கதிர்காமதேவன் ஜெனிட் நிரோஷன் (வயது 24) மற்றும் மகேந்திரன் சசிதரன் ஆகிய இருவருமே கத்திக் குத்துக்கு இலக்காகி மரணமானவர்களாவர். வெள்ளவத்தை33ஆவது ஒழுங்கைப் பகுதியில் வைத்தே மேற்படி இரு குழுவினர் மத்தியிலும் மோதல் வெடித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, சம்பவத்தில் மரணித்த இருவரில் ஒருவர், மோதலை விலக்க எத்தனித்த சமயமே கத்திக் குத்துக்கு இலக்காகி மரணமானதாகவும் மற்றுமொரு தகவல் கூறுகின்றது. இச்சம்பவத்தை அடுத்து குறித்த இடத்திற்கு விரைந்த வெள்ளவத்தைப் பொலிஸார் மோதலுடன் தொடர்புடைய இரு இளைஞர்களைக் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதுடன் அவர்களிடமிருந்த கூரிய ஆயுதமொன்றையும் கைப்பற்றியுள்ளனர் என பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான ரஞ்சித் குணசேகர தெரிவித்தார். கல்கிஸை பகுதியில் வைத்து மேற்படி குழுவினர் மது அருந்தியுள்ளதாகவும் பின்னர் ஏற்பட்ட வாய்த்தர்க்கமே மோதல் வரையில் நீடித்து படுகொலையில் முடிவடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பில் பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் கூறியதாவது,

வெள்ளவத்தையைச் சேர்ந்த மேற்படி தமிழ் இளைஞர் குழு நேற்றுமுன்தினம் கல்கிஸை பகுதியில் ஒன்றாக மது அருந்தியுள்ளது. அச்சமயம் இவர்களிடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இரு குழுக்களாகப் பிரிந்து சென்றுள்ள அவர்கள் வெள்ளவத்தை ரொக்சி திரையரங்குக்கு அருகில் அமைந்தள்ள உணவகம் ஒன்றில் வைத்து மீண்டும் சந்தித்துள்ளனர். உணவகத்துக்குள் வைத்து மீண்டும் இரு குழுக்களுக்கிடையில் தர்க்கம் ஏற்படவே அது மோதலாக மாறியுள்ளது. அதன்போது உணவகத்திலுள்ளவர்கள் அவர்களை தடுத்து நிறுத்தி அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர். பின்னர் அவ்விரு தரப்பினரும் அவ்விடத்திலிருந்து சென்று மீண்டும் வெள்ளவத்தை 33ஆவது ஒழுங்கைப் பகுதியில் சந்தித்து மீண்டும் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது ஒரு குழுவைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் கூரிய ஆயுதங்களைக் கொண்டு மற்றைய குழுவைச் சேர்ந்த இளைஞர்கள் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதனால் மூவர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இவ்வாறு காயமடைந்த மூவரும் களுபோவில வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் அவர்களில் ஒருவர் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மற்றுமொரு இளைஞர் நேற்றுக் காலை உயிரிழந்துள்ளார். காயமடைந்த மற்றைய இளைஞன் வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்தும் தீவிர சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.

சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பான மரண விசாரணைகள் கல்கிஸை மேலதிக நீதிவான் தர்ஷிகா விமலசிறியினால் நேற்றுக்காலை மேற்கொள்ளப்பட்டது. மரண விசாரணைகளை அடுத்து சடலங்களை பிரேத பரிசோதனைகளுக்கு உட்படுத்துமாறு நீதிவான் உத்தரவிட்டார். இதேவேளை சம்பவத்துடன் தொடர்புடைய இரு இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது மோதலில் ஈடுபட்டவர்கள் அனைவரும் வட பகுதியைச் சேர்ந்த தமிழ் இளைஞர்கள் எனவும் அவர்கள் தற்போது குடும்பம் சகிதம் வெள்ளவத்தையில் தங்கியிருப்பவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்தி வரும் வெள்ளவத்தை பொலிஸார் கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களிடமும் தொடர்ந்தும் விசாரணைகளை நடத்தி வருவதுடன் உரிய விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply