வார்த்தை ஜாலங்களால் ‘இனி` மக்களை ஏமாற்ற முடியாது
தமிழ் மக்களின் பிரச்சினையில் இப்போது ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர்கள் கூடுதலான அக்கறை செலுத்துகின்றார்கள். குறிப்பாக இனப் பிரச்சினைக்கான தீர்வு பற்றி முக்கிய தலைவர்கள் அடிக்கடி பேசுகின்றார்கள். யாழ்ப்பாணம் மாநகர சபைக்கும் வவுனியா நகர சபைக்குமான தேர்தல் பற்றிய அறிவிப்பு வெளியாகிய பின்னரே ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர்களின் கரிசனையும் வெளிப்படுகின்றது.
தேர்தல் காலத்தில் இப்படியான கரிசனைகள் வெளிவருவது வழக்கம். எனினும், தேசிய இனப் பிரச்சினையைப் பொறுத்த வரையில் மிகக் கூடுதலான கரும்புள்ளிகளைக் கொண்டிருக்கும் ஐக்கிய தேசியக் கட்சி கொண்டிருக்கும் கரிசனை விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதல்ல.
இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் அக்கறை அரசாங்கத்துக்கு இல்லை என்று ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர்கள் குற்றப்பத்திரிகை வாசிக்கின்றார்கள். ஜயலத் ஜயவர்த்தன ஒருபடி மேலே சென்று, யாழ் மாநகர சபையை ஐக்கிய தேசியக் கட்சி கைப்பற்றினால் இருபத்திநான்கு மணித்தியாலயங்களுக்குள் ஏ-9 வீதி திறக்கப்படும் என்கிறார். இப்படியெல்லாம் சிறுபான்மையின மக்களுக்குப் பூச்சுற்றும் கைங்கரியத்தையே ஐக்கிய தேசியக் கட்சி நீண்ட காலமாகச் செய்து வருகின்றது.
தேசிய இனப்பிரச்சினையைப் பொறுத்த வரையில் பிரதான குற்றவாளி என்று ஐக்கிய தேசியக் கட்சியைக் கூறுவதில் எவ்வித தவறும் இல்லை. தமிழ் பேசும் மக்களின் வரலாற்று ரீதியான வாழ்புலங்களில் திட்ட மிட்ட சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்தியமையே தேசிய இனப்பிரச்சினையின் `நதி மூலம்` என்பதை யாரும் மறுக்க முடியாது.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிதாமகர் டீ. எஸ். சேனநாயக தான் இக்குடியேற்றத் திட்டங்களின் மூலவர். சிங்களம் மட்டும் சட்டம் எனப் பொதுவாக அழைக்கப்படும் அரசகரும மொழிச் சட்டம் இனப் பிரச்சினை தீவிரமடைந்ததற்குக் காரணமாகியது. இச்சட்டத் துக்கான பொறுப்பிலிருந்தும் ஐக்கிய தேசியக் கட்சி தன்னை விலக்கிக்கொள்ள முடியாது. அன்றைய அரசாங்கத்துக்கு இச்சட்டத்தில் எவ்வளவு பொறுப்பு உள்ளதோ அதேயளவு பொறுப்பு ஐக்கிய தேசியக் கட்சிக்கும் உண்டு.
சிங்களவர்கள் மாத்திரம் இலங்கையின் பாரம்பரிய குடிகள் என்றும் சிறுபான்மையினங்கள் அனைத்தும் சிங்களவர் என்ற பெருமரத்தில் சுற்றிப்படரும் கொடிகள் என்றும் கூறிய ஜனாதிபதி ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவர். எல்லாவற்றுக்கும் மேலாக கறுப்பு ஜூலை இனசங்காரத்தைத் தமிழ் மக்கள் ஒருபோதும் மறக்கப்போவதில்லை.
இரண்டு முக்கியமான சந்தர்ப்பங்களில் ஐக்கிய தேசியக் கட்சி சரியான முடிவை எடுத்திருந்தால் இனப் பிரச்சினை என்ற பேச் சுக்கே இப்போது இடம் இருந்திருக்காது. ஒன்று பண்டா-செல்வா ஒப்பந்தம். மற்றது பொதுசன ஐக்கிய முன்னணியின் அதிகாரப் பகிர்வுத் தீர்வுத்திட்டம்.
இரண்டு தீர்வுகளும் நடைமுறைக்கு வராமற் போனதற்கு ஐக்கிய தேசியக் கட்சியே தனிப் பொறுப்பாளி. இன்று பதின்மூன்றாவது திருத்தம் பற்றியும் பேசுகின்றார்கள். தங்களுடைய ஆட்சிக் காலத்திலேயே பதின்மூன்றாவது திருத்தம் செயலற்றதாக்கப்பட்டது என்பதை இவ்வளவு சீக்கிரம் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர்கள் மறந்திருக்கக்கூடாது.
தவறு செய்யும் அரசியல் கட்சிகள் தங்கள் தவறுகளைத் திருத்திக்கொள்வது வரவேற்புக் குரியது. ஆனால் தவறுகளைத் திருத்திக் கொள்வதென்பது வார்த்தைகளில் மாத்திரம் அடங்கிவிடக் கூடாது. செயலில் வெளிப்பட வேண்டும். சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் செயற்பாடுகளில் பங்கு பற்றுமாறு விடுக்கப்பட்ட எல்லா அழைப்புகளையும் ஐக்கிய தேசியக் கட்சி இதுவரை நிராகரித்து வந்துள்ளது.
பிரதான அரசியல் கட்சி என்ற வகையில் இனப்பிரச்சினையின் தீர்வுக்கான தனது திட்டத்தை மக்களுக்குத் தெரியப்படுத்தும் கடப்பாடு ஐக்கிய தேசியக் கட்சி க்கு உண்டு. இதுவரை அக்கட்சி அதைச் செய்யவில்லை.
வார்த்தை ஜாலங்களால் மக்களை ஏமாற்ற முடியாது. தமிழ் பேசும் மக்களின் நலனில் உண்மையிலேயே ஐக்கிய தேசியக் கட்சிக்கு அக்கறை இருக்குமேயானால் செயல் மூலம் அதை வெளிப்படுத்த வேண்டும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply