பொய்களை அள்ளி வீசுகிறார் டிரம்ப் : நேரலையை பாதியில் நிறுத்திய அமெரிக்க ஊடகங்கள்

அமெரிக்க அதிபரும் குடியரசு கட்சி வேட்பாளருமான டொனால்டு டிரம்ப் (வயது 74), பதவியை தக்க வைப்பாரா அல்லது ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் கைக்கு அந்த நாற்காலி சென்று விடுமா? என்பது மில்லியன் டாலர் கேள்வியாக எதிரொலித்து கொண்டிருக்கிறது.

அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் கடந்த 3-ந் தேதி நடந்தபோது, அந்த நாட்டின் 120 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத வகையில், 66.9 சதவீத ஓட்டுகள் பதிவாகி சாதனை படைத்து உள்ளதாக அங்கிருந்துவரும் ஊடக தகவல்கள் கூறுகின்றன.

இந்த தேர்தலில் மொத்தம் உள்ள 538 தேர்தல்சபை வாக்குகளில் 270 வாக்குகளை பெற்றவர்தான், அமெரிக்க ஜனாதிபதி பதவியில் அமர்ந்து அதிகாரம் செலுத்த முடியும். வாக்குப்பதிவு முடிந்த உடனேயே ஓட்டு எண்ணிக்கை தொடங்கி விட்டது. நேற்று முன்தினம் ஜோ பைடன் 238 வாக்குகளையும், டிரம்ப் 213 வாக்குகளையும் பெற்றிருந்தனர். ஆனால் மிச்சிகன், விஸ்கான்சின் மாநிலங்களை ஜோ பைடன் கைப்பற்றியதைத் தொடர்ந்து அவரது நிலை நேற்று மேலும் வலுப்பெற்றது.

கடைசியாக கிடைத்த தகவல்கள்படி, ஜோ பைடன் ஜனாதிபதி பதவியை கைப்பற்றுவதற்கு மேலும் 6 வாக்குகள் மட்டுமே தேவை. அவர், 264 தேர்தல் சபை வாக்குகளை பெற்று, வெற்றி முகத்தில் உள்ளார். அவரை எதிர்த்து கடும் போட்டியை ஏற்படுத்தியுள்ள டிரம்ப் 214 ஓட்டுகளுடன் பின்தங்கி இருக்கிறார். அங்கு பைடனுக்கு 6 வாக்குகள் கிடைத்து விட்டால் 270 என்ற இலக்கை அவர் எளிதாக அடைந்து விடுவார். வெள்ளை மாளிகையில் அடியெடுத்து வைப்பார் என்று தெரிகிறது.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பாக டிரம்ப் ஊடகங்களுக்கு பேட்டி அளித்துக்கொண்டிருந்தார். இதனை அனைத்து ஊடகங்களும் நேரலையாக ஒளிபரப்பு செய்தன.

பேட்டியின்போது பேசிய டிரம்ப், ஜனநாயக கட்சியினர் சட்டவிரோத வாக்குகளை பயன்படுத்தி தேர்தல் வெற்றியை எங்களிடம் இருந்து திருட முயற்சிக்கிறார்கள் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். சுமார் 17 நிமிடங்கள் தொடர்ந்து பேசிய டிரம்ப், திரும்பத் திரும்ப எதிர்க்கட்சி மீது குற்றச்சாட்டை கூறினார்.

இதனால் அதிருப்தி அடைந்த பல்வேறு அமெரிக்க ஊடகங்கள் நேரலையை பாதியில் நிறுத்தி விட்டன. டிரம்ப் தவறான தகவல்களை பரப்புவதாகவும் பொய்யான குற்றச்சாட்டுகளை அவர் சுமத்துவதாகவும் அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதிபர் டிரம்ப் பேட்டியின் நேரலையை ஊடகங்கள் திடீரென நிறுத்தியது அமெரிக்க மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply