ஆறு மாதங்களில் மீள்குடியேற்றம்: இந்தியாவிடம் இலங்கை உறுதிமொழி
விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ மோதல்களால் இடம்பெயர்ந்திருக்கும் தமிழ் மக்கள் ஆறு மாத காலப்பகுதிக்குள் மீள்குடியமர்த்தப்பட்டு, முகாம்கள் இல்லாமல் செய்யப்படுமென இலங்கை, இந்தியாவிடம் உறுதிமொழி வழங்கியுள்ளது. புதுடில்லிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோர் இந்த உறுதிமொழியை வழங்கினர்.
நேற்று புதன்கிழமை புதுடில்லி சென்றடைந்த இந்த உயர்மட்டக் குழுவினர் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்ததுடன், இடம்பெயர்ந்த தமிழர்கள் விரைவில் மீளக்குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும்; சுட்டிக்காட்டினர்.
இந்திய வெளிவிவகார அமைச்சருடனான சந்திப்பு சாதகமான முறையில் அமைந்திருந்தது எனக் குறிப்பிட்ட பசில் ராஜபக்ஷ, இந்தியா விடுத்த அனைத்துக் கோரிக்கைகளுக்கும் தாம் சாதகமாகப் பதிலளித்ததாகக் கூறினார். குறிப்பாக முகாம்களிலுள்ள மக்கள் குறித்தே நாம் சாதகமாகக் கூறியிருந்தோம் என அவர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.
இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் முகாம்களிலுள்ள மக்களின் பராமரிப்புத் தொடர்பாக இந்தச் சந்திப்பில் ஆராயப்பட்டதாகவும் பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
“நாம் 180 நாட்கள் வேலைத் திட்டத்தை ஆரம்பித்துள்ளளோம். இதன் முதற்கட்டமாக கண்ணிவெடிகள் அகற்றப்படவுள்ளன. முதலில் நான்கு கண்ணிவெடி அகற்றும் குழுக்களை இலங்கைக்கு அனுப்ப இந்தியா இணங்கியிருந்தது. எனினும், எமது கோரிக்கைக்கு இணங்க அதன் எண்ணிக்கை 8 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்துவதற்கு உதவியாகவிருக்கும்” என அவர் மேலும் கூறினார்.
அத்துடன், இலங்கையில் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் அவர்களுக்கான நிவாரணப் பணிகளுக்கு இந்தியா உதவி வழங்கும் என்பது குறித்து இலங்கை உயர்மட்டக் குழுவினருடன் கலந்துரையாடியதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply