தமிழகத்தில் முதல் முறையாக விமான ஓடுதளத்திற்கு கீழ் நான்கு வழிச்சாலை
முதல் உலகபோர் நடந்தபோது 1942-ம் ஆண்டு மதுரையில் விமான நிலையம் ஏற்படுத்தப்பட்டது. அதில் முதல் பயணிகள் விமானம் 1956-ம் ஆண்டு சென்னை-மதுரை-திருவனந்தபுரம் இடையே இயக்கப்பட்டது. அதன்பின் ஒவ்வொரு காலகட்டத்திலும் தரம் உயர்த்தப்பட்டு வந்தது. தற்போது 2 டெர்மினல்களுடன், மதுரை விமான நிலையம் 17 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் தமிழகத்தின் சென்னைக்கு அடுத்தப்படியாக மிகப்பெரும் விமான நிலையமாக உள்ளது. மாதம் ஒன்றுக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் பயணிகள் வருகின்றனர். மதுரையில் இருந்து சென்னை, பெங்களூரு, டெல்லி, மும்பை, ஐதராபாத், ராஜமுந்திரி, திருப்பதி போன்ற நகரங்களுக்கும், இலங்கை, துபாய், சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்படுகிறது.
மதுரை விமான நிலையத்தின் ஓடுபாதை தற்போது 7 ஆயிரத்து 500 சதுர அடி நீளத்திற்கு உள்ளது. இதனை 12 ஆயிரத்து 500 சதுர அடி நீளத்திற்கு விரிவாக்கம் செய்ய சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கின. ஆனால் நிலம் கையகப்படுத்தும் பணி காரணமாக விரிவாக்க பணிகள் மந்தமாக நடந்தது.
இந்த விரிவாக்கத்திற்காக அயன்பாப்பாக்குடி, பெருங்குடி உள்பட 6 கிராமங்களில் இருந்து 3 ஆயிரத்து 100 பட்டாதாரர்களிடம் இருந்து சுமார் 460 ஏக்கர் நிலங்களும், 615 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலமும் கையகப்படுத்தப்படுகின்றன. தமிழக அரசு நில உரிமையாளர்களுக்கு வழங்குவதற்காக ரூ.166 கோடி ஒதுக்கீடு செய்து உள்ளது. தற்போது 90 சதவீத கையகப்படுத்தும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இதற்கிடையில் விமான ஓடுதள விரிவாக்கம் காரணமாக மதுரை சுற்றுச்சாலைக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. சுற்றுச்சாலையை துண்டித்தால் தென்மாவட்டங்களில் இருந்து மதுரைக்கு வரும் வாகனங்கள் கடும் பிரச்சினையை சந்திக்க நேரிடும்.
எனவே சுற்றுச்சாலைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் விமான ஓடுதளத்தை விரிவாக்கம் செய்ய புதிய திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதாவது ஜெர்மனியில் உள்ள லெய்சிக் விமான நிலைய ஓடுதளத்திற்குள் கீழ் சாலை உள்ளது. அதாவது மேல் சாலையில் விமான ஓடுதளமும், கீழ் சாலையில் வாகன போக்குவரத்தும் இருக்கிறது. அதே போல் பிரதமர் மோடியின் தொகுதியான உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசி லால்பகதூர் விமான நிலையமும் மேல்புற சாலையில் ஓடுதளமும், கீழ்புறத்தில் வாரணாசி- லக்னோ நான்கு வழிச்சாலையும் அமைக்கப்பட்டுள்ளது.
இதே முறையில் மதுரையில் விமான ஓடுதளம் மேல்புறமும், கீழ்புறம் ரிங்ரோடு நான்குவழிச்சாலை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து ஆய்வுக்கூட்டம் மதுரை விமான நிலையத்தில் நேற்று நடந்தது. அமைச்சர் உதயகுமார், கலெக்டர் அன்பழகன், விமான நிலைய இயக்குனர் செந்தில்வளவன் ஆகியோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் மாணிக்கம், பெரியபுள்ளான், எஸ்.எஸ்.சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ், வருவாய் கோட்டாட்சியர்கள் ரமேஷ், சவுந்தர்யா ஆகியோரும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விமான நிலைய விரிவாக்கம் குறித்தும், நிலம் கையகப்படுத்தும் பணிகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.
கூட்டத்திற்கு பின் அமைச்சர் உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
தென்மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவான மதுரை விமான நிலைய விரிவாக்கம் செய்யும் வகையில் ரன்வேயை (ஓடுதளம்) நீட்டிப்பு செய்யும் பணிகளுக்கான நிலம் கையகப்படுத்தும் பணி 90 சதவீதம் முடிந்துள்ளது. ஓடுதளம் விரிவாக்கத்திற்காக வாரணாசி விமான நிலையத்தை போல அண்டர்பாஸ் முறை திட்டமிடப்பட்டு வருகிறது. அதன்படி, மேல் பகுதியில் விமான ஓடுதளமும், கீழ் பகுதியில் ரிங்ரோடு அமைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. இது குறித்து முழு அளவிலான அறிக்கை தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply