இந்திய நிதி உதவியின் கீழ் ரூபாய் 600 மில்லியனுக்கும் அதிகமான செலவில் இந்நாட்டில் செயற்படுத்தப்படும் சமூக அபிவிருத்தி திட்டத்திற்காக இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே (2020.11.10 செவ்வாய்க்கிழமை புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டது.

நிதி அமைச்சின் செயலாளர் திரு.எஸ்.ஆர்.ஆட்டிகல அவர்கள் மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோர் இவ் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

இவ் ஒப்பந்தமானது 2005ஆம் ஆண்டு தற்போதைய கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதியாக சேவையாற்றிய காலப்பகுதியில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம் என்பதுடன் அது ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை நீட்டிக்கப்பட்டு இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்படுகிறது.

கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே அவர்களின் பங்கேற்புடன் விஜேராமவிலுள்ள கௌரவ பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

குறித்த ஒப்பந்தத்திற்கு அமைவாக விசேட அபிவிருத்தி திட்டத்திற்கான செலவு ரூபாய் 300 மில்லியனுக்கும் அதிகமாவதுடன் அவசரகால அம்பியூலன்ஸ் சேவை, வீடமைப்பு திட்டம், புதிய யாழ். கலாசார மத்திய நிலைய செயற்பாடுகள் என்பன இதனூடாக செயற்படுத்தப்படும்.

சிறு அபிவிருத்தி திட்டத்திற்காக அதிகபட்சமாக ரூபாய் 300 மில்லியன் செலவிடப்படுவதுடன், மீள்குடியேற்றம், தங்குமிடம், வாழ்வாதாரம், வேலைவாய்ப்பு, பெண்களுக்கு அதிகாரமளிக்கும் தொழிற்பயிற்சி, கல்வி மற்றும் ஆராய்ச்சி, கலாசார நடவடிக்கை, விளையாட்டு, தொழிற்துறை மேம்பாடு, மருத்துவ நிலையங்கள் மற்றும் வைத்தியசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் வைத்திய உபகரணங்களை பெற்றுக் கொடுத்தல் என்பனவும் இதன் கீழ் செயற்படுத்தப்படவுள்ளன.

தற்போது செயற்பாட்டிலுள்ள இந்த திட்டம் புதிய ஒப்பந்தத்திற்கமைய தொடர்ந்து முன்னெடுக்கப்படும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply