பிரபாகரன் இறுதி நேரத்தில் கூட வெளிநாட்டிலுள்ள ஆதரவாளர்களின் பலத்தில் உறுதியான நம்பிக்கை வைத்தார்

முல்லைத்தீவு நந்திக்கடல் பகுதியில் நடந்த இறுதிக்கட்ட மோதல்களின் போது விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அரசாங்கப் படைகளிடம் சரணடைவதற்குத் தீர்மானித்திருந்தால் குறைந்தது 500 விடுதலைப் புலி போராளிகளின் உயிர்களையாவது காப்பாற்றியிருக்க முடியுமெனப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், புலனாய்வுப் பிரிவுத் தலைவர் பொட்டம்மான், கடற்புலித் தளபதி சூசை உள்ளிட்ட விடுதலைப் புலி உறுப்பினர்கள் 100×100 மீற்றர் சதுரப் பிரதேசத்துக்குள் ஒடுக்கப்பட்ட பின்னராவது மோதல்களைத் தவிர்த்துப் பிரபாகரன் புலிப் போராளிகளின் உயிர்களைப் பாது காத்திருக்கலாம் எனவும் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“குறுகிய மனம்படைத்த பிரபாகரனும், அவரின் கொள்கைகளைப் பின்பற்றுபவர்களும் யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு செயற்பட்டிருந்தால் இறுதி நேரத்தில் குறைந்தது 500 உயிர்களையாவது பாதுகாத்திருக்க முடியும்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இறுதி நேரத்தில் கூட பிரபாகரன் வெளிநாட்டிலுள்ள விடுதலைப் புலி ஆதரவாளர்களின் பலம் தொடர்பாக உறுதியான நம்பிக்கைவைத்திருந்தார் என்பது இதன்மூலம் தெளிவாகிறது” எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரபாகரன் எந்தப் பாதையினூடாகத் தப்பிக்க முயற்சிப்பார் என இராணுவத்தினர் ஏற்கனவே எதிர்பார்த்திருந்த வழியூடாகவே அவர் தப்பிக்க முயற்சித்தார் எனவும் பாதுகாப்பு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

“விடுதலைப் புலி போராளிகள் இராணுவத்தினருடன் சண்டையிட்டுக்கொண்டிருக்கும் தருணத்தில் தனது முக்கியமான மெய்ப்பாதுகாவலர்களுடன் தப்பிச் செல்வதற்குப் பிரபாகரன் முயற்சித்தார்” என்றும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. எஞ்சியிருந்த நிலப்பரப்பில் மே மாதம் 16ஆம் திகதி முதல் ஆரம்பித்த மோதல்கள் நான்கு நாட்கள் தொடர்ந்ததாகவும், நந்திக்கடல் குடாப்பகுதியில் விடுதலைப் புலிகளின் முதல்தொகுதி உயர்மட்டத் தலைவர்கள் தப்பிச் செல்ல முற்பட்டபோதே அங்கு பாரிய வெடிப்புக்கள் இடம்பெற்றதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

விடுதலைப் புலிகளின் முதலாவது குழுவினர் சிறிய ரக ஆயூதங்களைப் பயன்படுத்திக் கடும் தாக்குதல் நடத்தியவாறு சிறிது தூரம் முன்னேறிச் சென்றதாகவும்,  விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் செல்லும்போது அவர்கள் சாதாரணமாக சிறியரக ஆயுதங்களையே பயன்படுத்துவார்கள் எனவும் பாதுகாப்பு அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“விடுதலைப் புலிகளின் தலைவரின் பாதுகாப்புப் பிரிவின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவமான விநோதனின் சடலம் அடையாளம் காணப்பட்டது. அதன் பின்னர் சிறிது நேரத்திலேயே அதன் முக்கியம் தெரியவந்தது” என லெப்டினட் கேணல் லாலந்த கமகே கூறினார்.

விடுதலைப் புலிகளின் முதலாவது குழு ஊடறுத்துச் செல்வதற்கும், இரண்டாவது குழு அதற்கு ஆதரவாகவும் அனுப்பப்பட்டிருந்ததாகப் பாதுகாப்பு அமைச்சின் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் பின்னரே பிரபாகரன் உட்பட முக்கியஸ்தர்கள் 18 சடலங்கள் மீட்கப்பட்டிருப்பதாகத் தகவல் கிடைத்தது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply