துபாயில் பல்வேறு புதிய அம்சங்களுடன் களைகட்டும் சபாரி பூங்கா
துபாய் மாநகராட்சி சார்பில் 100 கோடி திர்ஹாம் செலவில் அல் வர்கா 5 என்ற பகுதியில் உள்ள அல் அவீர் செல்லும் சாலையில் பிரமாண்டமான வன விலங்குகள் உலாவும் பகுதி அமைக்கப்பட்டது. மொத்தம் 119 எக்டேர் நிலப்பரப்பில் உருவாக்கப்பட்ட இந்த வன விலங்கு பகுதியானது சபாரி பூங்கா என பெயரிடப்பட்டது. இங்கு காட்டில் வாழும் விலங்குகள், பறவைகள் மற்றும் தண்ணீர் வாழ் உயிரினங்கள் என 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட வன விலங்குகள் இயற்கையான சூழலில் நடமாடி வருகிறது.
இந்த பூங்கா பராமரிப்பு மற்றும் மறுசீரமைப்பு பணிகளுக்காக கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் மூடப்பட்டு புதுப்பொலிவுடன் பொதுமக்களுக்காக கடந்த அக்டோபர் மாதம் 5-ந் தேதி மீண்டும் திறக்கப்பட்டது. இதில் சிறப்பம்சம்சமாக அரேபியா, ஆப்பிரிக்கா, ஆசியா நாடுகளில் உள்ள கிராமங்களின் மாதிரிகள் மிக தத்ரூபமாக சிறந்த உள்கட்டமைப்புகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. மிக பிரமாண்டமான இந்த வளாகத்தை சுற்றி பார்க்க பிரத்தியேக சுற்றுலா பஸ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மக்காவ் எனப்படும் பேசும் பறவை பயிற்சியாளருடன் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த பறவை சிறுவர்களுடன் பேசி மகிழ்ச்சிப்படுத்தி வருகிறது. அதேபோல பயிற்சியளிக்கப்பட்ட ரைனோசரஸ் ஹார்ன்பில் பறவையின் செயல்பாடுகள் பார்வையாளர்களை கவர்கிறது. சிம்பான்சி குரங்குகள் குழந்தைகளுடன் கண்ணாடி தடுப்பு பின்புறத்தில் இருந்து விளையாடுகிறது.
இந்த பூங்காவை பார்வையிட பெரியவர்களுக்கு 50 திர்ஹாமும், சிறியவர்களுக்கு 20 திர்ஹாமும் நுழைவு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பூங்கா முழுவதும் சபாரி பயணம் செய்ய பெரியவர்களுக்கு 85 திர்ஹாமும், சிறியவர்களுக்கு 30 திர்ஹாமும் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வாகனம் மற்றும் உதவியாளர்கள் உதவியுடன் சபாரி பயணம் செல்லலாம்.
இதில் 3 வயதுக்குட்பட்ட குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு (2 உதவியாளர்கள் உள்பட) அனுமதி இலவசமாகும். இலவச அனுமதி பெற அடையாள அட்டை அல்லது ஆவணங்களை கொண்டு செல்ல வேண்டும். இந்த பூங்காவை காலை 9 மணியில் இருந்து மாலை 5 மணி வரை பொதுமக்கள் பார்வையிடலாம். http://www.dubaisafari.ae/ என்ற இணையத்தளம் மூலமாக, மாநகராட்சியின் செயலியில் பதிவு செய்து அனுமதி பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து இந்த பூங்காகை காண பொதுமக்கள் பலர் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply