லண்டனில் மீட்கப்பட்டு, டெல்லி வந்த 3 சாமி சிலைகள் தமிழக போலீசிடம் ஒப்படைப்பு
பழங்கால கலைப்பொருட்கள் மீது அதீத ஈடுபாடு கொண்ட ஒரு குழு, இணையதளத்தில் இந்தியாவின் கலைப்பொருட்கள் தளத்தை பார்வையிட்டது. அப்போது, விஜயநகர பேரரசு காலத்தைச் சேர்ந்த (கி.பி.1500-ம் ஆண்டு காலத்தவை) ராமர், லட்சுமணனின் வெண்கல சிலைகள் அவர்களது கண்ணில் பட்டது. இந்த சிலைகள் லண்டனில் இருப்பது தெரியவந்தது. இதைப்போல மற்றொரு ஆர்வலரின் கண்ணில் அனுமன் சிலை பட்டது. இது சிங்கப்பூரில் இருப்பது கண்டறியப்பட்டது.
இந்த 4 சிலைகளும் நாகப்பட்டினம் மாவட்டம் அனந்தமங்கலத்தில் உள்ள ராஜகோபால சுவாமி கோவிலுக்கு சொந்தமானவை என்று கண்டறியப்பட்டது. 1978-ம் ஆண்டுவரை அங்கு இருந்த இந்த சிலைகள், பின்னர் அதே ஆண்டில் திருடப்பட்டு உள்ளன.
இதனைத் தொடர்ந்து சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார், சிலை திருட்டு தொடர்பாக வழக்கு பதிவு செய்து, திருட்டில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். இதற்கிடையே, சிலைகளை மீட்பதற்காக இந்திய தொல்லியல் துறையின் புராதன பொருட்கள் பிரிவு இயக்குனர் மூலம் லண்டனில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சிலை திருட்டு தொடர்பான போலீஸ் நடவடிக்கை பற்றிய அறிக்கையும் லண்டன் போலீசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதன்பேரில் லண்டன் போலீசார் துரித நடவடிக்கை மேற்கொண்டு சிலை விற்பனையாளரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது ராமர், சீதை மற்றும் லட்சுமணன் ஆகிய 3 சிலைகள் அவரிடம் இருப்பதும், இதை அவரிடம் விற்பனை செய்தவர் இறந்துவிட்ட தகவலும் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, 3 சிலைகளும் அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டன. இவை அனைத்தும் பல கோடி ரூபாய் மதிப்பிலானவை.
இதன்பின்னர் உரிய நடைமுறைகளுக்கு பிறகு, 3 சிலைகளும் கடந்த செப்டம்பர் மாதம் 15-ந்தேதி இந்தியா வசம் ஒப்படைக்கப்பட்டன. இதன்பிறகு டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்ட அந்த சிலைகள் நேற்று தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் கொடுக்கப்பட்டது.
சிலைகளை ஒப்படைக்கும் இந்த நிகழ்ச்சி டெல்லியில் உள்ள இந்திய தொல்லியல்துறை அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மத்திய கலாசாரத்துறை மந்திரி பிரகலாத்சிங் பட்டேல் கலந்து கொண்டு, தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஏ.டி.ஜி.பி. அபய்குமார் சிங்கிடம் 3 சிலைகளையும் ஒப்படைத்தார். அப்போது, சிலைகளை மீட்க நடவடிக்கை மேற்கொண்ட தமிழக போலீசார் மற்றும் மத்திய தொல்பொருள் ஆய்வுத்துறையை பாராட்டினார்.
இதன்பின்னர் ஏ.டி.ஜி.பி. அபய்குமார் சிங் அளித்த பேட்டியில், “இந்த 3 சிலைகளுடன் கடத்தப்பட்ட அனுமன் சிலையும் விரைவில் தமிழகம் கொண்டு வரப்படும். இதுபோல நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் இருந்து கடத்தப்பட்ட துவாரபாலகா சிலையும் மீட்கப்பட்டு இருக்கிறது. விரைவில் அதுவும் தமிழகத்துக்கு வரும். இதுவரை 10 சிலைகள் வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்டு உள்ளன. இன்னும் சில சிலைகள் ஆஸ்திரேலியாவிலும், அமெரிக்காவின் நியூயார்க்கிலும் உள்ளன” என்று கூறினார். தற்போது மீட்கப்பட்ட 3 சிலைகளும் உடனடியாக தமிழகத்துக்கு எடுத்துச் செல்லப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மீட்கப்பட்ட ராமர் மற்றும் லட்சுமணன் சிலைகள் தலா 30 கிலோவும், சீதை சிலை 25 கிலோவும் எடை கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply