லடாக்கை சீனாவின் அங்கமாக காட்டியதற்கு இந்தியாவிடம் மன்னிப்பு கேட்டது டுவிட்டர்
லடாக் யூனியன் பிரதேசத்தின் லே நகரில், நாட்டுக்காக உயிர்நீத்த ராணுவ வீரர்களின் நினைவைப் போற்றும் விதமாக ‘ஹால் ஆப் பேம்’ என்ற போர் நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து செய்த ஒரு நேரடி ஒளிபரப்பில் ‘ஜம்மு காஷ்மீர், சீன மக்கள் குடியரசு’ என்று டுவிட்டர் காட்டியது.
இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியான ஜம்மு-காஷ்மீரை சீன மக்கள் குடியரசின் அங்கமாக டுவிட்டர் காட்டியது பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்காக சமூக ஊடக ஆர்வலர்கள், டுவிட்டரை கடுமையாக சாடினார்கள்.
(ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு பிரித்தது நினைவுகூரத்தக்கது.)
மத்திய அரசும் இதில், அமெரிக்க சமூக ஊடக நிறுவனமான டுவிட்டரை கடந்த மாதம் 22-ந் தேதி கடுமையாக எச்சரித்தது. நாட்டின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் ஏற்படும் எந்த அவமதிப்பையும் ஏற்க முடியாது என இந்தியா கூறியது.
இது தொடர்பாக டுவிட்டர் தலைமை செயல் அதிகாரி ஜாக் டோர்சிக்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் செயலாளர் அஜய் சாவனி கடிதம் ஒன்றை எழுதினார். அப்போது, இது தொழில்நுட்ப பிரச்சினைதான், விரைவில் சரி செய்யப்பட்டு விடும் என்று டுவிட்டர் தெரிவித்தது.
ஆனாலும், தரவு பாதுகாப்பு மசோதா தொடர்பான நாடாளுமன்ற கூட்டு குழு, லடாக்கை சீனாவின் ஒரு பகுதியாக டுவிட்டர் காட்டியதை கடுமையாக சாடியதுடன், இது தேசத்துரோகம் என்று கூறி, பிரமாண பத்திரத்தில் டுவிட்டர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியது.
பா.ஜ.க. எம்.பி. மீனாட்சி லேகி தலைமையிலான தரவு பாதுகாப்பு மசோதா தொடர்பான நாடாளுமன்ற கூட்டு குழு முன்பாக டுவிட்டர் நிறுவனத்தின் இந்திய பிரதிநிதிகள் ஆஜராகி மன்னிப்பு கேட்டனர். ஆனால், “இது கிரிமினல் குற்றம், ஒரு பிரமாண பத்திரத்தை டுவிட்டர் சமர்ப்பிக்க வேண்டும்” என்று கூட்டு குழு கூறியது.
இந்த நிலையில், நடந்த தவறுக்கு இந்தியாவிடம் எழுத்துபூர்வமாக மன்னிப்பு கேட்டு, டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை தனியுரிமை அதிகாரி டேமியன் கரியன் கையெழுத்திட்ட பிரமாண பத்திரத்தை டுவிட்டர் வழங்கியது.
இதை நாடாளுமன்ற கூட்டு குழு தலைவர் பா.ஜ.க. எம்.பி. மீனாட்சி லேகி நேற்று தெரிவித்தார். இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், “லடாக்கை சீனாவில் காட்டியதற்கு பிரமாண பத்திரத்தில் டுவிட்டர் எழுத்துபூர்வ மன்னிப்பு கோரி உள்ளது. இந்திய உணர்வுகளை புண்படுத்தியதற்காக அவர்கள் மன்னிப்பு கேட்டுள்ளனர். நவம்பர் 30-ந் தேதிக்குள் தவறு சரி செய்யப்படும் என உறுதியும் அளித்துள்ளனர்” என கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply