சர்வதேச மன்னிப்புச் சபையின் குற்றச்சாட்டை அரசாங்கம் நிராகரிப்பு

வன்னிப் பிரதேசத்தில் இடம்பெயர்ந்திருக்கும் மக்களுக்கு நிவாரண உதவிகள் சென்றடைவதை அரசாங்கம் தடுத்து வருவதாக சர்வதேச மன்னிப்புச் சபை சுமத்தியுள்ள குற்றச்சாட்டை அரசாங்கம் திட்டவட்டமாக நிராகரிக்கின்றது என ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஜனாதிபதி செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

வன்னிப் பிரதேசத்தில் பொரும் எண்ணிக்கையிலான மக்கள் இன்னும் புலிகளின் கட்டுப்பாட்டிலேயே இருந்துவருவதோடு அவர்கள் பல்வேறு கஷ்டங்களையும் அனுபவித்து வருகின்றனர்.
அப்பிரதேசங்களில் பொதுமக்கள் சுதந்திரமாக நடமாடுவதைத் தடைசெய்துள்ள புலிகள், அங்கு முன்னேறிவரும் பாதுகாப்புப் படையினருக்கெதிராக அந்த அப்பாவி மக்களை கேடயங்களாகப் பயன்படுத்தி வருகின்றனர் என்பதே உண்மையாகும்.

இடம்பெயர்ந்துள்ள மக்களுள் அரசின் உதவி தேவைப்படுவோர்களது விபரங்களை அரசாங்கம் முழுமையாக அறிந்து வைத்துள்ளது. புலிகளின் காட்டுமிராண்டித்தனமான கெடுபிடிகளுக்கு மத்தியிலும் அம்மக்களுக்கான உதவிகள் முழுமையாகச் சென்றடைவது தொடர்பில் அரசாங்கம் திருப்தியடைகிறது.

வன்னியில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு நிவராண உதவிகள் சென்றடைவதையும் அவை உரியவர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படுவதையும் கண்காணிக்கும் பணியை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் தெரிவு செய்யப்பட்ட சில தொண்டு முகவர் நிறுவனங்கள் அரசாங்க பொறிமுறையினூடாக மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் அதனைக் கண்காணிப்பதற்கு வேறு எந்த சர்வதேச கண்காணிப்பாளர்களும் அவசியமில்லை.

இதேவேளை, வன்னிப் பிரதேசத்தில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள சில அரச சார்பற்ற நிறுவனங்கள், புலிகளுக்கு நிதி மற்றும் பொருள் உதவிகளை வழங்கி வருவதற்கான நியாயமான ஆதாரங்கள் கிடைத்துள்ளது.

இவ்வாறான செயல்கள் அரசாங்கத்தின் இறைமைக்கு எதிரானதாக இருப்பதோடு புலிகள் தமது பயங்கரவாத இலக்குகளை அடைந்து கொள்ள துணை புரியும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply