இடம் பெயர்ந்தோரின் சுகாதார மேம்பாட்டுக்கு உலக வங்கி 24 மில்லியன் அமெரிக்க டொலர் உதவி
வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து தற்போது வவுனியாவிலுள்ள நலன்புரி முகாம்களில் தங்கியிருப்போரின் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்காக உலக வங்கி 24 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்கவுள்ளது. சர்வதேச அபிவிருத்தி அமையத்தின் திட்டத்துக்கு அமைய வழங்கப்படவுள்ள இந்நிதி உதவியின் அரைப் பகுதி அண்மைய மோதல்களால் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் உருவாகியுள்ள விசேட சுகாதார நெருக்கடிகளைத் தீர்த்து வைக்க பயன்படுத்தப்படவுள்ளதாக உலக வங்கியின் இலங்கைக்கான இயக்குநர் நவோகா இஷி தெரிவித்தார். இது பற்றி அவர் மேலும் குறிப்பிடுகையில்,
உலக வங்கியால் கடந்த 15ஆம் திகதி இலங்கைக்கு வழங்கத் தீர்மானிக்கப்பட்ட 60 மில்லியன் டொலருக்கு மேலதிகமாகவே இந்த 24 மில்லியன் டொலர் உதவி வழங்கப்படவுள்ளது.
இலங்கையில் மோதல்கள் முடிவடைந்துள்ள நிலையில் மீள்குடியேற்றம், புனர்நிர்மாணம் மற்றும் சமாதானத்தைக் கட்டியெழுப்புதல் போன்ற விடயங்களில் அரசாங்கம் சவால்களை எதிர்நோக்கியுள்ளது. இந்நிலையில் மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள மற்றும் இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் வசிக்கும் மக்களுக்கான சுகாதார சேவைகளை வழங்குவது உடனடித் தேவையாகும்.
ஏதிர்வரும் காலங்களில் வடக்கு மற்றும் கிழக்கின் சுகாதார தேவைகளில் முக்கியமான நடவடிக்கைகளுக்கு நிதியுதவி அளிக்கப்படவுள்ளது. இடம்பெயர்ந்தோர் தங்கியிருக்கும் முகாம்களில் நடமாடும் சிகிச்சை நிலையங்களை அமைத்தல், அங்கவீனமுற்றோருக்கு மறுவாழ்வளித்தல், அதிர்ச்சியுற்றுள்ள மக்களுக்கான சிகிச்சைகள் மற்றும் முன்னுரிமை அளிக்க வேண்டிய உடனடித் தேவைகள் என்பன இதில் அடங்கும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply