எம்.ஜி.ஆருக்கு துணை நின்ற அனைவரும் ரஜினிக்கு ஆதரவு தருவார்கள் : சைதை துரைசாமி
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கப்போவதாக நேற்று அறிவித்தார். இந்தநிலையில், பெருநகர சென்னை மாநகராட்சி முன்னாள் மேயரும், மனிதநேய அறக்கட்டளை நிறுவனருமான சைதை துரைசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ரஜினிகாந்த், “ஜனவரியில் கட்சி துவக்கம், வருகின்ற டிசம்பர் 31-ந்தேதி அறிவிப்பு” என்று சொல்லி இருக்கிறார். இது சாதாரண அறிவிப்பு அல்ல. தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய திருப்பம் இது. 1972-ல் எம்.ஜி.ஆர். கொண்டுவந்த மாற்றத்தைப்போல அமையக்கூடிய திருப்பத்தை, ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.
கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் 5-ந்தேதி சென்னை வேலப்பன்சாவடியில் எம்.ஜி.ஆர் உருவச்சிலை திறப்பு விழாவில் அவர், “என்னால் எம்.ஜி.ஆர். போல நல்லாட்சியை, ஏழைகளுக்கான ஆட்சியை, சாமானியருக்கான ஆட்சியை, நடுத்தரவர்க்க குடும்பங்களுக்கான ஆட்சியை தரமுடியும்” என்பதை ஆழ்ந்த நம்பிக்கையுடன் உறுதிபடச் சொல்லியிருந்தார். ஏழைகளுக்கான, சாமானிய மக்களுக்கான, எம்.ஜி.ஆரின் ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் மலரச்செய்ய ரஜினிகாந்த் முன்வந்திருப்பதை நான் வரவேற்கிறேன். அவருக்கு எம்.ஜி.ஆருக்கு துணை நின்று, ஆதரவளித்து, தி.மு.க.வை வீழ்த்திய அனைவரும் ஆதரவு தருவார்கள் என்பது திண்ணம்.
கொரோனா நோய் தொற்றுக் காலத்தில் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் மக்களின் நலனை மட்டுமே மனதில் கொண்டு அவர் முழுநேர அரசியலில் ஈடுபடுவது என்று முடிவு எடுத்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது, பாராட்டத்தக்கது. அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply