போராடும் இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக லண்டனில் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக் கோரி, டெல்லியில் கடும் குளிர் நிலவி வரும் நிலையிலும் விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து 12-வது நாளாக நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக லண்டனில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். லண்டனில் உள்ள இந்திய தூதரக அலுவலகம் முன் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். “பஞ்சாப் விவசாயிகளுக்கு நாங்கள் இருக்கிறோம்” என்று கோஷமிட்டவாறு ஆர்ப்பாட்டம் நடந்த நிலையில் லண்டன் போலீசார் போராட்டக்காரர்களை கலைத்தனர்.
மேலும் 30-க்கு மேற்பட்டவர்கள் ஒரு இடத்தில் கூடினால் அபராதம் விதிக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். தொடர்ந்து கோவிட் -19 விதிகளை மீறியதற்காக பலரை போலீசார் கைது செய்ததாக பி.டி.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் இங்கிலாந்தில் உள்ள பல்வேறு கட்சிகளை சேர்ந்த 36 எம்.பிக்கள் இந்திய வம்சாவளி எம்.பிக்கள் உள்ளிட்டோர் இங்கிலாந்தின் வெளியுறவு செயலாளர் டோமினிக் ராப் வசம் விவசாயிகள் பிரச்சினைகள் குறித்து கடிதம் எழுதினர்.
முன்னதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்திய விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தார். இதற்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பை தெரிவித்ததுடன் பிற நாடுகளின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட்டால் இருநாடுகளின் உறவும் பாதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply